ஏப்.20 முதல் ஊரடங்கு தளர்வுகளை திட்டமிட்டபடி செயல்படுத்த ஆயத்தம்

0 15431
ஏப்.20 முதல் ஊரடங்கு தளர்வுகளை திட்டமிட்டபடி செயல்படுத்த ஆயத்தம்

ஏப்ரல் 20 முதல் ஊரடங்கு தளர்வுகளை திட்டமிட்டபடி, விதி மீறாமல் செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஆன்லைன் வணிகமான இ-காமர்ஸ், ஊரகத் தொழில்துறைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

உணவு பதப்படுத்தும் தொழில்கள், சாலை கட்டுமான பணிகள், ஊரகவேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகள், விவசாயப் பணிகள், பாசனப் பணிகள், கட்டுமானப் பணிகள் மற்றும் பிற ஊரக தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. முடங்கிக் கிடக்கும் பொருளாதார செயல்பாடுகளை அனுமதிப்பது, வேலைவாய்ப்புகளை வழங்குவது, குறிப்பாக தினக்கூலிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் ஊரக பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் தளர்வு அளிக்கப்படுகிறது.

இதற்கான ஆயத்தங்கள், ஏற்பாடுகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொழிலாளர் துறை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கப்பல் போக்குவரத்து மற்றும் சுரங்கத் துறை செயலர்கள், பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக அமல்படுத்துவது, பணியாளர்கள், தொழிலாளர்களுக்கான போக்குவரத்து வசதிகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் கண்காணிப்பு, ஊரடங்கு தளர்வு அளிக்கப்படும் பகுதிகளில் மாநில அரசுகளின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கொரோனா தடுப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு, ராஜ்நாத் சிங் தலைமையில் கூடி, ஆலோசனை நடத்தியது. கொரோனா ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து பொருளாதாரச் செயல்பாடுகளை அனுமதிப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பது தொடர்பாகவும், இதில் பல்வேறு அமைச்சகங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ராஜ்நாத் சிங் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு தளர்வுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments