20ந் தேதிக்குப் பின்னர் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் - பொருளாதார வல்லுநர்கள்
நாடு தழுவிய ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 20ந் தேதிக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், கடந்த மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில்,
திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் 45 சதவீத பொருளாதார நடவடிக்கைகள் மீட்சி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற பொருளாதாரத்தை மையப்படுத்தி அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள விலக்குடன், மீன்பிடித் தொழில் மற்றும் சிறுதொழில்களுக்கு சலுகையளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் அனைத்து விவசாயப் பணிகள் மற்றும் வேளாண் பொருட்கள் விற்பனைக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே இருந்த பொருளாதார ஏற்றம், இந்த தளர்வுகளால் 45 சதவீதமாக அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். உயிர்களைக் காப்பதே முதன்மையானது என்று பிரதமரின் கருத்தை ஆமோதிக்கும் தொழில்துறையினர், படிப்படியாக பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்க இருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஊரடங்கில் தளர்த்தப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா தலைமையில் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. வணிகம், தொழில்துறையினருக்கு அனுமதி , வேலைவாய்ப்பு, தினக்கூலித் தொழிலாளர்களின் பிரச்சினைகள் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல போக்குவரத்தை அனுமதிப்பது குறித்தும் இந்தக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்புடன் தொழில்கூடங்கள் இயங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டல்களை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Comments