அமெரிக்காவில் ஒரே நாளில் 2,500க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

0 4712
அமெரிக்காவில் இதுவரை 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பலி

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பேரச்சமும், பெரும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். 

உலக நாடுகளை உள்ளங்கையில் உருட்டி உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரசின் தாக்கத்தினால் நாளுக்கு நாள் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் அங்கு நொடிக்கு நொடி பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதால் அங்கு கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. குறிப்பாக நியூயார்க் நகரத்தில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமான நிலையில் காணப்பட்டது.

இதேபோல் ஒரே நாளில் கூடுதலாக 31 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நோய்த் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 500 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஹவாய் தீவுகளில் அனைத்து கடற்கரைப் பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால் புகழ்பெற்ற கடற்கரைகள் அனைத்தும் ஆள்அவரமின்றி அமைதியாகக் காணப்படுகின்றன. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களுக்கு ஐந்தரை மில்லியன் மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெவிரித்துள்ளார்.

மாகாணங்களில் ஊரடங்கை நீக்குவது குறித்து ஆளுநர்களே முடிவெடுக்கலாம் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில் லூசியானாவில் ஊரடங்கைத் தளர்த்துவது தொடர்பாக தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது என ஆளுநர் தெரிவித்துள்ளார். மற்ற மாகாணங்களைத் தொடர்ந்து இல்லினாய்ஸ் பகுதியிலும் நடப்பு கல்வியாண்டு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments