95 வயது முதியவர் கொரோனாவில் மரணம்... கோட்டைவிட்ட அதிகாரிகள்..! சிந்தாதிரிபேட்டையில் திக் திக்
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கொரோனா பாதிப்பில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்டவரின் 95 வயது தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நிலையில், 3 நாட்கள் கழித்து அவருக்கு கொரோனா பாதிப்பு என்று ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. கவனக்குறைவால் 189 குடும்பங்கள் தனிமை வளையத்துக்குள் அடைக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை சிந்தாதிரிப் பேட்டை வேதகிரி தெருவில் வசித்து வந்த 95 வயது முதியவரின் 55 வயது மகன் டெல்லியில் இருந்து திரும்பியவர் என்பதால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி சிகிச்சைக்கும் சேர்ந்திருக்கிறார்.
மருத்துவமனையில் அவரை இருமுறை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு அவரது 95 வயது தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அழைத்துக் கொண்டு ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த மருத்துவர்கள் தற்போது இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை நடைபெறுவதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தியுள்ளனர்.
அங்கு முதியவரை பரிசோதித்து பார்த்துவிட்டு அவருக்கு மாரடைப்பு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சளி மற்றும் ரத்தமாதிரிகளை சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். அத்தோடில்லாமல் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து ராயப்பேட்டை வரும் வழியில் முதியவர் பரிதாபமாக பலியானதால், அவரது சடலத்தை வீட்டிற்கு எடுத்துச்சென்று முறைப்படி மத சடங்குகள் செய்தபின், 40 க்கும் மேற்பட்ட உறவினர்கள் பங்கேற்க உடல் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், 16 ந்தேதி முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது ஆய்வில் உறுதியானது. இதையடுத்து ஆம்புலன்சுடன் முதியவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேதகிரி தெருவுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு பேரதிர்ச்சி..!
அவர் இறந்துவிட்டதையும், 40 பேருடன் சென்று அடக்கம் செய்த நிகழ்வையும் அறிந்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், டெல்லி சென்று திரும்பிய முதியவரின் மகனையும், பேரனையும் தனிமை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரது மேல் வீட்டில் வசிப்போர், அக்கம்பக்கத்தினர் என 189 குடும்பங்களை தனித்திருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி வேதகிரி தெருவில் இருந்து யாரும் வெளியேறவும், வெளியாட்கள் தெருவுக்குள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உஷாராக கொரோனா வார்டில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தால் ஒரு தெருவையே சீல் வைக்கும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட நபர்கள் மூலமாக மட்டுமின்றி, அவர்கள் எடுத்து வரும் பொருட்கள் மூலமாகவும் கொரோனா பரவலாம் என்பது 95 வயது முதியவர் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளியில் சென்று வருபவர்கள் மட்டுமல்ல, அவர்கள் கையில் எடுத்துச் செல்லும் பொருட்கள் மூலமாகவும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால் எச்சரிக்கையுடன் பொருட்களை கையாளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த 96 வயது முதியவருக்கு மாரடைப்பால் இறந்ததாக இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் மீது, சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் கொடுத்தால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித் துள்ளது. கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பாக செய்தி யாளர் களிடம் விளக்கம் அளித்த திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தர்மராஜன், சுகாதாரத் துறையினர் தான், இந்த பிரச்சினையில் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Comments