கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: 200க்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ்..!

0 3851
ஒரே நாளில், கொரோனா பாதிப்பிலிருந்து, 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதாரத்துறை தகவல்

தமிழ்நாட்டில், மேலும் 56 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், அந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1323 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில், பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

கொரோனா பாதிப்பு விவரங்களை தமிழக சுகாதாரத்துறை, செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்து 31 பேர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 78,349 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

23 ஆயிரத்து 934 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும், கொரோனா அறிகுறி இல்லையென்றாலும், தொற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வழியே பயணித்தவர்கள் என்ற அடிப்படையில், 34 பேர் அரசின் தனிமை முகாம்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், 29,673 கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 56 பேருக்கு, பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1323ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அறிகுறி, பாதிப்பு உள்ளிட்டவற்றுடன், மருத்துவமனைகளின் தனி வார்டுகளில், 1,891 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதுமில்லாத நிலையில்,சிகிச்சைக்குப் பின், ஒரே நாளில், 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம், கொரோனா பாதிப்பிலிருந்து, பூரண நலம் பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, 283ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, கரூரில், 51 பேரும், திருச்சியில் 33 பேரும், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்ட அளவில், தஞ்சாவூரில் ஒரே நாளில், 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்திருப்பதோடு, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments