அமெரிக்காவில் ஒரே நாளில் 2,100க்கும் அதிகமானோர் உயிரிழந்த பரிதாபம்: இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 34,500ஐக் கடந்தது
அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதனால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று அமெரிக்காவில் கடும் உயிர்ச்சேதத்தை விளைவித்து வருகிறது. நேற்று மட்டும் 2 ஆயிரத்து 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 29 ஆயிரம் பேர் நோய்த் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து இதுவரை 6 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 ஆயிரத்து 300க்கும் அதிகமானோர் கவலைக்கிடமான முறையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்படாத மொண்டானா, வயோமிங் மற்றும் வடக்கு டகோட்டா உள்ளிட்ட மாகாணங்களின் ஆளுநர்கள் விரும்பினால், அங்கு வணிக நடைமுறைகள் நாளை முதல் அமல்படுத்தப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஊரடங்கால் முடக்கப்பட்ட மாகாணங்களில் 3 கட்டங்களாக ஊரடங்கைத் தளர்த்தவும் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இதனிடையே கொரோனா சோதனைக்குத் தேவையான பொருட்கள் வந்து சேரவில்லை என பல மாகாணங்களின் ஆளுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மிசவுரி மாகாணத்தில் மே 3ம் தேதி வரை மக்கள் நடமாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக 20 மில்லியன் டாலரை நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார்.
நியூ ஹாம்ப்ஷையர் மாகாணத்தில் நடப்பாண்டு முழுவதும் மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் பாடங்களைக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்கள் பணியாளர்கள் 2 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.
Comments