ஏப்ரல் 20 முதல் ஆன்லைனில் செல்போன், ஆடைகள் வாங்கலாம்
நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு மே 3 வரை தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆயினும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வரும் 20ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் மூலமாக புதிய செல்போன், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்டவற்றை இனி வாங்க இயலும்.
இது குறித்த விளக்கத்தை உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 20 முதல் மொபைல் போன்கள், பிரிட்ஜ், லேப்டாப், ஏசி சாதனங்கள், ஆயத்த ஆடைகள், எழுதுபொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களை அமேசான், பிலிப்கார்ட் , ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்களிடமிருந்து ஆன்லைனில் வாங்க முடியும்.
மளிகை, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் வீட்டிலிருந்தபடியே பெறலாம். இந்த பொருட்களை டெலிவரி செய்யும் சரக்கு வாகனங்களுக்கு சாலைகளில் செல்ல சிறப்பு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இரண்டு ஓட்டுனர்கள் ஒரு உதவியாளருடன் சரக்கு வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சரக்குகளை விநியோகித்து திரும்பும் காலி வாகனங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வாகன பழுதுபார்க்கும் கடைகள், நெடுஞ்சாலைகளில் உள்ள சில உணவகங்கள் சிறிய இடைவெளி விட்டு வாடிக்கையாளர்களை நிறுத்தினால் அவற்றுக்கும் அனுமதியளிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments