“ஆறு மணியாச்சுன்னா குடிக்கத்தோணுதா ? தீர்வு சொல்கிறார்கள் மருத்துவர்கள்

0 3431
“ஆறு மணியாச்சுன்னா குடிக்கத்தோணுதா ? தீர்வு சொல்கிறார்கள் மருத்துவர்கள்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மன ரீதியாக குழப்பத்தில் உள்ளவர்களுக்கும் மதுவிலிருந்து விலகியிருப்பதால் உடல் ரீதியாக பாதிப்பில் இருப்பவர்களுக்கும் தீர்வுகளை வழங்க தயாராக உள்ளதாகக் கூறுகின்றனர் அரசு மருத்துவர்கள். அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்...

நாடு தழுவிய ஊரடங்கு அன்றாட கூலி வேலைக்குச் செல்பவர்கள் முதற்கொண்டு லட்சங்களில் சம்பளம் வாங்கும் பெரு நிறுவன ஊழியர்கள் வரை வீட்டில் முடக்கிப் போட்டுள்ளது. காலையில் எழுந்து பரபரப்பாகக் கிளம்பி, அரைகுறையாய் சாப்பிட்டு, வாகன நெரிசலில் சிக்கி அலுவலகம் சென்று வேலை பார்த்துவிட்டு மீண்டும் போக்குவரத்து நெரிசலில் வீடு திரும்பும் எந்திர வாழ்க்கையில் இருந்து நம்மை முற்றாக திசை திருப்பி விட்டிருக்கிறது இந்த ஊரடங்கு. 

பரிதாப நிலையில் இருப்பவர்கள் குடிமகன்கள்தான். அன்றாடம் குடிக்கும் குடிமகன்கள் இந்த ஊரடங்கால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் அவர்களுக்கு இந்த ஊரடங்கு குடியிலிருந்து மீள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

குடிப்பழக்கத்துக்கு மிக மோசமான அளவில் அடிமைப்பட்டு இருப்பவர்கள் சிலர் மதுவுக்கு மாற்றாக எத்தனாலை அருந்துவது, சானிடைசரில் எலுமிச்சை, தண்ணீர் கலந்து குடிப்பது என்பன உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு உயிரை விடும் செய்திகளும் வந்த வண்ணமே உள்ளன. இது போன்றவர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று ஆலோசனைகளையும் மாத்திரை, மருந்துகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது தமிழக அரசின் 104 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்தால் உரிய மன நல ஆலோசனைகளும் வழங்கப்படும். குடிக்கு அடிமையானவர்கள் மட்டுமல்லாது ஊரடங்கால் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் எவராயினும் 104 என்ற எண்ணுக்கோ அல்லது 044 26425585 என்ற எண்ணுக்கோ அழைத்தால் மருத்துவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும் என்கிறார் மருத்துவர் பூர்ணசந்திரிகா.

இந்த ஊரடங்கு காலத்தை உடலையும் மனதையும் பக்குவப்படுத்த கிடைத்த வாய்ப்பாக எண்ணி, நேர்மறையான சிந்தனைகளை வளர்த்தெடுத்து, புதியதொரு அனுபவப் பாதைக்குள் அடியெடுத்து வைப்போம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments