டாஸ்மாக் கடைகளை தினமும் 2 மணிநேரம் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி
ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை தினமும் 2 மணிநேரம் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கால் தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை நடைபெறுவதாகக் கூறி மனுதாக்கல் செய்யப்பட்டது.
மேலும் மதுவுக்கு அடிமையான சிலர் மெத்தனால், வார்னிஷ் போன்றவற்றை குடித்து உயிரிழந்துள்ளதால், நாளொன்றுக்கு 2 மணி நேரமாவது டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அசாம் மற்றும் கேரளாவில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை சுட்டிக் காட்டி, டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Comments