கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை - “கை” கொடுக்கும் என நம்பிக்கை

0 5996
கொரோனாவை குணப்படுத்த பரிந்துரைக்கப்படும் “பிளாஸ்மா சிகிச்சை”

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன, எந்த மாதிரியான நபர்களிடம் இருந்து பிளாஸ்மாவைப் பெறலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

கொரோனாவுக்கான சிகிச்சைகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடைபெற்று வருகின்றன. இதில் நூறாண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் பிளாஸ்மா சிகிச்சை முறையும் முயற்சித்துப் பார்க்கப்பட்டு வருகிறது.

மனித ரத்தத்தில் பொதுவாக சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்த தட்டுகள் உள்ளிட்டவை காணப்படும். இந்த மூன்றையும் வடிகட்டி எடுத்தபின் மீதமிருக்கும் திரவ மூலக்கூறுதான் பிளாஸ்மா என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பிளாஸ்மாவில் ஏராளமான புரதங்களும் நோய் எதிர்ப்பு சக்தியும் காணப்படும்.

இதற்கு முன் ஸ்பானிஷ் ஃப்லு, பன்றிக்காய்ச்சல், எபோலா உள்ளிட்ட பிற நோய்களுக்கு, ஆரோக்கியமான மனிதர்களிமிருந்து பெறப்பட்ட பிளாஸ்மாவை உடலுக்குள் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் கொரோனாவுக்குப் பரிந்துரைக்கப்படும் கான்வலசண்ட் பிளாஸ்மா ( convalescent plasma ) சிகிச்சை எனப்படும் இந்த சிகிச்சை முறையில் கொரோனாவில் இருந்து குணமாகி, 14 முதல் 28 நாட்கள் வரை கண்காணிப்பில் இருந்த நபர்களின் ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்மா செலுத்தப்படுவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

அவரது உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பிறகு, உடலில் எந்த அளவுக்கு எதிரணுக்கள் உள்ளன என்பதைத் தீர்மானிக்க எலிசா என்ற சோதனை நடத்தப்படும். இறுதியாக கொடையாளியின் ரத்தம் தூய்மையானதா என்பதைத் தீர்மானிக்க இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நிர்ணயித்துள்ள திட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்ட பிறகே ரத்தம் எடுக்கப்படும் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள். 

உலகம் முழுக்க இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டுள்ள நாடுகள், அதன் முடிவுக்காக காத்திருக்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக அனுமதி கிடைத்த பின் தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கான கருவிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இந்த சிகிச்சை முறை நிச்சயம் நல்ல பலனை அளிக்கும் என மருத்துவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments