கொரோனா vs குழந்தைகள் - உண்மை என்ன ?
குழந்தைகள் மீதான கொரோனா வைரசின் தாக்குதல் குறைவாகவே இருப்பதற்கான காரணம் குறித்தும் அவர்களை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு....
தமிழகத்தில் 10 வயதுக்குட்பட்ட 33 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளைக் குறைவாகவே தாக்குகிறது என்றும், அதன் அறிகுறி மற்றும் தீவிரமும் குறைவாக இருப்பதாகவும் பல்வேறு கட்ட ஆய்வுகள் கூறுகின்றன.
அனைத்து வயதுக் குழந்தைகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று கூறும் மருத்துவர்கள், ஆனால், அதன் சதவிகிதம் மிகக் குறைவே என்கின்றனர். குழந்தைகள் வீட்டில் வைக்கப்பட்டு பெற்றோரால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள் என்றும் அதனாலேயே அவர்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் நம் செல்களுக்குள் நுழைய ஏஸ் - 2 ( Angiotension converting Enzyme 2(ACE- 2) ) என்ற ஏற்பிகள் அவசியம் என்றும் குழந்தைகளுக்கு இந்த ACE- 2 ஏற்பிகள் முழுமையாக முதிர்ச்சி அடையாத நிலையில் இருக்கும் என்பதால், வைரஸ் தாக்கம் தீவிரமாவதில்லை என்றும் கூறுகிறார் மருத்துவர் சீனிவாசன்...
குழந்தைகள் குளிர்காலத்தில் சளித் தொந்தரவு போன்ற மூச்சுப் பாதைப் பிரச்னைகளுக்கு அடிக்கடி ஆளாவதால், வைரஸை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகள் அவர்கள் ரத்தத்தில் ஏற்கெனவே அதிகமாக இருக்கும் என்றும் அது அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது என்றும் மருத்து ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பொதுவாக, குழந்தைகளுக்கு எதிர்ப்பாற்றல் தன்மை வளர்ந்துகொண்டே இருக்கும் என்பதால் புது வைரஸ் வருகையில், அதை எதிர்த்துச் செயல்படும் வேகம் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகள் மீதான கொரோனா வைரசின் தாக்குதல் குறைவே என்றாலும் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகள் அடிக்கடி அசுத்தமான பகுதிகளையோ, பொருட்களையோ தொட்டு விளையாடுவதும் பிறகு கைகளை வாயிலோ, மூக்கிலோ, முகத்திலோ வைப்பதும் இயல்பாகக் கொண்டிருப்பார்கள். அந்த பழக்கத்தை மாற்ற முயற்சிப்பதோடு, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ பழக்கப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளுக்கு செல்போன்களை விளையாடக் கொடுப்பதற்குப் பதிலாக சிந்தனை உணர்வைத் தூண்டும் பல்வேறு பழமையான விளையாட்டுகளை அறிமுகம் செய்யலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Comments