ஊரடங்கில் கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடுகள்-சலுகைகள் எவை?
ஊரடங்கின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிக்கையை மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. அதன்படி,
மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். பாதுகாப்பு, மத்திய ஆயுதப்படை போலீசார், கருவூலம் , எரிவாயு மற்றும் பெட்ரோலிய சேவைகள், பேரிடர் மேலாண்மைத்துறை, சுங்கத்துறை, ரிசர்வ் வங்கி மற்றும் அதனால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிநிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் அலுவலங்கள் மூடப்பட்டிருந்தாலும் காவல்துறை, பாதுகாவலர், தீயணைப்பு போன்ற பாதுகாப்புத்துறைகள், சிறைத்துறை , மாவட்ட கருவூல அலுவலகங்கள், மின்சாரம், குடிநீர்,கழிவுநீர் அகற்றம், தூய்மைப்பணிகள் போன்றவை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
வனத்துறை, காட்டுத் தீ அணைக்கும் தீயணைப்புத் துறையினர், வனக் காப்பக ஊழியர்கள், முதியோர், நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பணிகளை நடத்துவதற்கு தடையில்லை.மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட காய்கறி சந்தைகள் இயங்கலாம். இதர அலுவலகங்கள் வீட்டிலேயே இயங்க வழிவகுக்க வேண்டும்.
மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி ,விநியோகம், விற்பனை, ஆய்வகங்கள், ஆம்புலன்சுகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு மருத்துவமனைகள் மூலம் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், திரையரங்குகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். அதே சமயம் மளிகைக் கடைகள், ரேசன் கடைகள், உணவுப் பொருட்களை விற்கும் கடைகள், பால், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், உரம், விதைகள் விற்பனை, பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்கள், எரிவாயு சிலிண்டர் விநியோகம் நடைபெறும். வங்கிகள், ஏடிஎம்கள் , அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், தொலைத்தொடர்பு, இணைய சேவைகள், ஒலிபரப்பு போன்றவை அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதே போல் பதப்படுத்தும் நிலையங்கள், தனியார் பாதுகாப்பு சேவைகள், விவசாயிகள் வயல் வெளிகளில் பணிசெய்தல் ஆகியவற்றுக்கு இந்த இரண்டாம் ஊரடங்கு அனுமதிக்கிறது.
Comments