தமிழக மீனவர்களின் சாப்பாட்டில் மண்ணை போட்ட அதிகாரிகள்..! கேரள அரசு செய்தது சரியா.?

0 12503

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்களை கேரள அதிகாரிகள் குழிதோண்டி புதைத்துவருவதாக தூத்துக்குடி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தமிழக மீனவர்கள் 15 நாட்களில் இருந்து 21 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடித்து வருவது வழக்கம்.அந்தவகையில் பெரிய படகுகளில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்களை கொள்முதல் செய்த மொத்த வியாபாரிகள் ஐஸ் போட்டு பதப்படுத்தி கேரளாவுக்கு லாரிகளில் எடுத்துச்சென்றனர்.

தமிழக அரசின் அனுமதியுடன் எடுத்துச்செல்லப்பட்ட மீன்களை, கேரள எல்லைக்குள் அனுமதிப்பது போல வாகனங்களை உள்ளே நுழைய விடுகின்றனர். பின்னர் சாலையோரத்தில் மீன் லாரிகளை நிறுத்தி வைக்கும் கேரள அரசு அதிகாரிகள், லட்சகணக்கான ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்களை, குப்பைகள் போல குழி வெட்டி பூமிக்குள் புதைத்து வருவதால் கடும் நஷ்டத்துக்குள்ளாகி இருப்பதாக மீன்வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

இரவுபகலாக கடலில் தங்கி மீன் பிடித்து வரும் தங்களிடம் மீன்களை வாங்கும் வியாபாரிகளிடம் கேரள அரசு அதிகாரிகள் கொரோனாவை காரணம் காட்டி அத்துமீறுவதால் தாங்கள் கடலுக்கு சென்றாலும் மீன்களை விற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் .

தங்கள் மீன்கள் எந்த விதத்தில் தரம் குறைவு என்று கேள்வி எழுப்பும் மீன் ஏற்றுமதியாளர்கள் , மீன்களை திருப்பி அனுப்பினால் கூட உள்ளூரில் விற்றாவது பிழைத்துக் கொள்வோம் இப்படி ஒட்டு மொத்தமாக மீன்களை குழிதோண்டி புதைப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர்.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தியை தருவதற்காக மீன் உணவாக வழங்கப்படுகிறது. அப்படி இருக்கையில், அம்மாநில அதிகாரிகள் இவ்வாறு வரம்பு மீறி நடந்து கொள்வதை தடுக்க தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், கேரள அரசிடம் பேசி உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments