மும்பையில் சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது தடியடி -விசாரணை நடத்த உத்தரவு...

0 5578

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது.

மே 3ம் தேதி வரை ரயில்கள் இயக்க வாய்ப்பில்லை என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையப் பகுதியில் திடீரென நேற்று ஆயிரத்து 500 தொழிலாளர்கள் திரண்டனர். ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் ரயில்கள் இயக்கப்படும் என்ற வதந்தியால் திரண்ட அவர்கள், தங்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்

21 நாள் ஊரடங்கால் வேலையின்மை, பட்டினி, உற்றார் உறவினரை காணாத ஏக்கம் என்று பல்வேறு பிரச்சினைகளை தொழிலாளர்கள் சுட்டிக் காட்டினர். காவல்துறையினர் கேட்டுக் கொண்ட பின்னரும் தொழிலாளர்கள் கலைய மறுத்ததால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்

சமூக விலகலை அலட்சியப்படுத்தி ஒரே நேரத்தில் பலநூறு பேர் திரண்டது எப்படி என்பது குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புலம் பெயர் தொழிலாளர்கள் ஊருக்குச் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும்,மே 3ந் தேதி ஊரடங்கு முடிந்தபின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற செய்திக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மே 3ம் தேதி வரை எந்த ஒரு பயணிகள் ரயிலும் இயக்கப்பட வாய்ப்பில்லை என்று ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments