தொற்றும் கொரோனா.... அச்சத்தில் அமெரிக்கா
கொரோனா வைரசின் தாக்கத்திற்கு அமெரிக்காவில் ஒரே நாளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதால் அங்குள்ள மக்கள் பேரச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சீனாவில் வடகோடியில் பரவத் தொடங்கிய கொரோனாவின் வேகம் உலகம் முழுவதும் 210 நாடுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் 19 லட்சத்து 24 ஆயிரம் பேர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளதால் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் நேற்று மட்டும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 26 ஆயிரத்து 400க்கும் அதிகமான மக்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 700க்கும் அதிகமானோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் இருப்பதால் லூசியானாவில் நடப்பு கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மீளுவதற்கு காலஅவகாசம் தேவை இருப்பதால் நடப்பாண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதமாக நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் பொருளதாரத்தை மேம்படுத்துவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே பயன்படுத்திய என் 95 முகக்கவசங்களை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்காக 415 மில்லியன் டாலர் மதிப்பில் தனியார் நிறுவனத்துடன் பெண்டகன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.
நோய் தொற்று காரணமாக வாஷிங்டன் சிறைகளில் இருந்து ஆயிரம் கைதிகளை விடுவிக்க மாகாண அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே கொரோனா தொற்றைக் குணப்படுத்துவதாகக் கூறப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்தின் ஆய்வறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படும் என அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments