கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா ..நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் கடுமையாக பதம்பார்த்து வரும் கொரோனாவுக்கு உலக அளவில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 980 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 18 லட்சத்து 61 ஆயிரத்தை கடந்து வருகிறது.
உலகில் எல்லா நாடுகளுக்கும் தொலைதூரப் பிரதேசங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் கோர தாண்டவத்தை தொடங்கிய கொரோனா, இப்போது அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் முழுவீச்சில் கைவரிசை காட்டி வருகிறது.
பாதிப்பு, பலி எண்ணிக்கை பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், 560,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22,115 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 32 ஆயிரத்து 634 பேர் மீண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்பெயினில் 169,496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 64,727 பேர் குணமடைந்துள்ளனர். 17,489 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கடுத்தபடியாக இத்தாலியில், 1,56,363 பேர் பாதிக்கப்பட்டு, 34,211 பேர் குணமடைந்துள்ளனர். 19,899 பேர் உயிரிழந்துள்ளனர்.ஃபிரான்சில் 132,591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 27,186 பேர் குணமடைந்துள்ளனர். 14 ஆயிரத்து 393 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
ஜெர்மனியில் 127,854 பேர் கொரனாவால் பாதிக்கப்பட்டதில், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு 64,300 பேர் குணமாகியுள்ளனர். 3,022 பேர் உயிரிழந்துள்ளனர். முதல் 5 இடங்களுக்குள் இருந்தபோதிலும் ஜெர்மனியில் பலி எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
பிரிட்டனில் 84,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, 10,612 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலகிலேயே மிகக் குறைந்த அளவாக ஏமன் நாட்டில் ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உள்ளது.
உலக அளவில் மொத்தம் 18,61,672 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, 431,536 பேர் மீண்டுள்ளனர். இதுவரை 114,980 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
Comments