இந்தியாவில் கொரோனா பலி 273 ஆக உயர்வு: கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது

0 3272

நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை  273ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவி பகுதி உள்பட பல்வேறு இடங்களில் கொரோனா நோய்க்கு ஒரே நாளில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ஒரே நாளில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 34 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்று நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 273-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிதாக 187 பேருக்கு கொரோனா பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் மட்டும் 15 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொரோனாவால் மேலும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர், பிகானீர், சுரு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 356ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதித்தோரில் 71 பேர் வெளிநாட்டினர் எனத் தெரிவிக்கும் மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள், சிகிச்சையில் 716 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

நாட்டில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில், மகாராஷ்டிரா முதலிடத்திலும், டெல்லி 2ஆவது இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிராவில் இதுவரை ஆயிரத்து 761 பேரும், டெல்லியில் ஆயிரத்து 69 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட புள்ளி விவரங்களில் கடந்த 24 மணி நேரத்தில்  909 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் கணக்கில் நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில் இது 126 குறைவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments