வங்கியை இழுத்து பூட்டிய கொரோனா ..! தனி நபரால் விபரீதம்

0 13493

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து டெல்லி சென்றுவந்த ஒருவருக்கு கொரோனா  நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் சென்று வந்த இந்தியன் வங்கி கிளையை இழுத்து பூட்டியதுடன் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள், சந்தித்த வாடிக்கையாளர்கள் 15 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த லால்பேட்டையில் இருந்து டெல்லி சென்று வந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. அவரிடம் இருந்து மருமகனுக்கும் கொரோனா தொற்று பரவியது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள தெருக்கள் பேரிகார்டுகளால் மூடப்பட்டது.

மேலும், டெல்லியில் இருந்து வந்த பின்னர் அவர் எங்கெல்லாம் சென்று வந்தார் என்பதை கண்டறிந்து, அந்த இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கடந்த 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் இந்தியன் வங்கிக்கு சென்று வந்ததை அறிந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

30ஆம் தேதி வங்கிக்குள் வந்ததும், வங்கி ஊழியர்கள் நீர் அருந்தும் தண்ணீர் கேனில் இருந்து டம்ளரை எடுத்து, அவர் நீர் அருந்துகிறார். அதன்பின்னர் வங்கியில் சில இடங்களில் கைவைத்துக்கொண்டே ஊழியர்களிடம் பேசிவிட்டு தனது வேலை முடிந்ததும் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகின்றது.

அதே போல 31ஆம் தேதி வங்கிக்கு வெளியே வாடிக்கையாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் கேனில் டம்ப்ளரால் நீர் அருந்தி விட்டு வரிசையில் நிற்கும் போது இருவர், அவர் மீது உரசிக்கொண்டு சென்றதையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அந்த கேனில் தண்ணீர் அருந்திய வங்கி ஊழியர்கள் 13 பேர் உள்பட அவருடன் உரசிச்சென்ற இருவரையும் அடையாளம் கண்டு தனிமையில் வைத்துள்ளனர். கிருமி நாசினி தெளித்து இந்தியன் வங்கி கிளையும் இழுத்து பூட்டப்பட்டது.

வருவாய்துறை அதிகாரிகள் இந்த நோய் பரவுதலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினருடன் இணைந்து முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி அரசு அதிகாரிகளிடம் தாங்கள் சென்று வந்த இடங்களை மறைக்காமல் சொல்வதன் மூலமே , நோய் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கிடையே கொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி குறிப்பிட்ட சமூக மக்களை வேறு சிகிச்சைக்கு கூட தனியார் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆர்த்தோ மருத்துவமனை ஒன்றில் கைகுடைச்சல் என்று நீண்ட நேரம் காத்திருந்த ஒருவரை உள்ளே அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

டெல்லி போயிட்டு வந்தீங்களா? என கேட்டு கனிவுடன் விசாரித்து, இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்டு சிகிச்சை அளிக்கலாமே? என்று காத்திருந்த நபர் ஆதாங்கம் தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் அவர்களை சமாதானப்படுத்தி சிகிச்சைக்கு உள்ளே அனுமதிப்பதாக கூற, நோயாளியோ எனக்கு சிகிச்சையே வேண்டாம் எனக்கூறும் விரக்தி மன நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் வெளிஊருக்கு சென்று திரும்பும் எவரும் தங்கள் மனைவி, குழந்தைகளுக்கு நோய் தொற்றைப் பரிசாக வாங்கி வருவதில்லை...! இனம், மொழி, சாதி, மதம், ஏழை, பணக்காரன் என பார்த்து கொரோனா வைரஸ் பரவுவதில்லை..! அவர்களை அறியாமலேயே தொற்றிக் கொண்ட கொடிய கிருமி கொரோனா..!

அதனால் தான் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்க மத்திய மாநில அரசுகளால் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பெருந்தொற்று தொற்றிக் கொண்டால் சிகிச்சைக்கு செல்லுங்கள், வைரஸ் தொற்றியிருக்க வாய்ப்புள்ளது என்று தோன்றினால் வீட்டிலேயே தனித்திருங்கள்..! வெளியில் சென்று வந்தால் கைகளை கழுவிக்கொள்ளாமல் கண்ட இடத்தில் கையை வைத்து வீட்டில் உள்ளோரையும் அவதிக்குள்ளாக்காதீர்கள்..!

தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுநோய், சமூக நோய் தொற்றாக பரவாமல் தடுப்பது, நமது ஒவ்வொருவரது கையிலும், செயலிலும் உள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments