கொரோனாவின் கோரதாண்டவம்.... அச்சத்தில் அமெரிக்கா

0 3578

உலகம் முழுவம் வெறியாட்டம் ஆடி வரும் கொரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் மீண்டும் ஒரே நாளில் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, ஆயிரத்து 800க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தனது கொலைகாரப் பயணத்தைத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அனைத்து நாடுகளையும் தாக்கி உள்ளது. இந்த வைரசின் மையப் புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் தொடக்கத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த உயிரிழப்பு ஒரே மாதத்தில் நூற்றுக்கணக்கில் தொடங்கி தற்போது நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு என்ற சராசரி அளவை எட்டி உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் ஆயிரத்து 808 பேர் பலியானதைத் தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா பறித்த உயிர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைக்குப் பின் 30 ஆயிரம் பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் 11 ஆயிரத்து 320 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று தாக்குதலின் கோர தாண்டவத்தால் நிலைகுலைந்து போய் உள்ள அமெரிக்காவில், கடந்த 4 நாள்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் அதிகமானோர் நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நியூயார்க் மாகணத்தில் மட்டுமே 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக நியூஜெர்சியில் 55-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றுக்கு அதிகயளவில் பாதிக்கப்பட்டிருந்த இத்தாலியை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா தற்போது முதலிடத்துக்கு வந்துள்ளது. சிகாகோ நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிக்கை 237 ஆகவும், நியூயார்கில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 714 பேராகவும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக நியூயார்க் நகரில் நடப்புக் கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள் மூடப்படுவதாக நகர மேயர் பில் டி பிளாஸியோ தெரிவித்துள்ளார். அங்கு பெரும்பாலான பள்ளிகள் கொரோனா தடுப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்களை அங்கே வைத்திருப்பது சாத்தியமற்றது என்று கூறியிருக்கும் பில், மாணவர்களின் கல்விக்காக 5 அம்ச திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

நியூயார்க் நகரில் குறைந்தபட்சம் 343 வீடற்றவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பில் கூறியுள்ளார். இதேபோல் நியூஜெர்ஸி பகுதியிலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க நியூஜெர்சியில் வெறும் 61 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இங்கு மருத்துவமனையில் 15 ஆயிரத்து 922 பேரும், அவசர சிகிச்சைப் பிரிவில் 3 ஆயிரத்து 821 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வென்டிலேட்டர் தட்டுப்பாட்டினால் ராணுவ மருத்துவக் கப்பலான யு எஸ் என் எஸ் கம்ஃபோர்ட் கப்பலில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் கொரோனாவால் பாதித்த மக்களுக்கு ஏற்கெனவே சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்கள் போக,  மீதம் 61 வென்டிலேட்டர்கள் மட்டுமே இருப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நியூயார்க்குக்கு அடுத்து நியூஜெர்சி மாகாணத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான மக்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மாகாணத்தில் மட்டும் ஆயிரத்து 650 பேருக்கு, வென்டிலேட்டர்  பயன்படுத்தப்படுகிறது. இதுபோக 61 வென்டிலேட்டர்கள் மட்டுமே மீதம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த வென்டிலேட்டர்கள் போதாது என்பதால், நியூஜெர்சி மாகாணத்திலுள்ள மருத்துவ துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். இதை கவனத்தில் கொண்டு, மத்திய தொகுப்பில் இருந்து 2 ஆயிரத்து 500 வென்டிலேட்டர்களை நியூஜெர்சி கோரியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments