தமிழகத்தில் வேளாண்மைத்துறைக்கு சிறப்பு திட்டத்தை அறிவிக்க முதலமைச்சர் வேண்டுகோள்

0 5572

என்-95 மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க, 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி வர நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ரயில், விமான சேவைகளை தொடங்கக் கூடாது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்தை பிரதமரும், பிற மாநில முதலமைச்சர்களும் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களுக்கு இடையே ரயில்கள் மற்றும் லாரிகள் மூலம் பருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் சீராகவும் சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டுவிட அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைக்கு சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் விவசாய கூலிகள் உள்ளிட்டோருக்கு கூடுதல் நிதியுதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்த முதலமைச்சர், இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என ஆலோசனை கூறினார்.

கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு விரைந்து பரிசோதனைகளை மேற்கொள்ள ராப்பிட் டெஸ்ட் கிட்கள் தேவை என்று சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு 2 லட்சம் விரைவு பரிசோதனை உபகரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

குறைந்தது மாவட்டத்திற்கு ஒன்று என தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா ஆய்வகங்கள் தேவை என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கொரோனா பரிசோதனை கருவிகள் மற்றும் விரைவு பரிசோதனை கருவிகள் பெரும் எண்ணிக்கையில் மத்திய அரசால் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். போதிய எண்ணிக்கையில் என்-95 மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய , ஏற்கெனவே கேட்டிருந்தபடி 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் 9 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ஏற்கெனவே ரூ.510 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டத்தை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மருத்துவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments