மின் கோபுர உச்சியில் முட்டாள் தந்தை கண்ணீருடன் கதறிய மகள் .! பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
சிவகங்கை அகதிகள் முகாமில், மனைவி தாக்கியதால் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்ற போதை ஆசாமியை 3 மணி நேரம் போராடி தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டனர், மனைவி மற்றும் மகளின் பாசப்போராட்டம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூர் அகதிகள் முகாமில் வசித்துவரும் ஜீவா என்ற குடிமகன் தான் மனைவி அடித்து விட்டதாக கூறி முன்கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற அதிபுத்திசாலி.
தென்றல் நகர் பகுதியை சேர்ந்த கனவனை இழந்து பெண் முத்துலெட்சுமி , இவருக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஆண்டு அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த ஜீவா என்பவரை முத்து லெட்சுமி மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
அண்மை காலமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜீவா தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார். இருந்தாலும் தனது வளர்ப்பு தந்தை மீது அந்த பெண் குழந்தை பாசமாக இருந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமையும் குடிபோதையில் வந்த ஜீவா மனைவியை அடித்து உதைத்துள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட பக்கத்து வீட்டுகாரரிடமும் தகராறு செய்ய, முத்துலெட்சுமியும், பக்கத்து வீட்டுக்காரர்களும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அடிதாங்க முடியாமல் தப்பிச்சென்ற ஜீவா அருகில் உள்ள உயர் அழுத்த மின்சார கோபுரத்தில் ஏறியுள்ளார்
போதை காட்டிய பாதையில் விரைவாக மேலே ஏறிய ஜீவா அங்கிருந்து தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நெஞ்சுவிடைக்க கத்தினார்.
உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுக்கடைகள் எல்லாம் அடைத்திருக்க மது எப்படி கிடைத்தது என்ற கேள்வியுடன் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து அந்த உயர்கோபுரத்தில் செல்லும் மின்கம்பிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஜீவாவிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஒலிப்பெருக்கி மூலம் உறுதி அளித்தும் இறங்கி வர மறுத்து அடம்பிடித்தார் ஜீவா
அவரது இந்த முட்டாள் தனமான முடிவை அறிந்து பதறியபடியே ஓடிவந்த அவரது மனைவியும் மகளும் கீழே இறங்கும்படி மன்றாடினர். அப்போதும் ஜீவா கீழ் இறங்கி வருவதாக தெரியவில்லை
தனது தந்தை கீழே இறங்கிவர அவரது வளர்ப்பு மகள் உருக்கமாக கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தும், தலைகேறிய போதையால் கீழே வர விரும்பாமல் தொடர்ந்து ஜீவா அடம் விடித்துக் கொண்டிருந்தார்.
நேரம் இருட்டிக் கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் அந்த கோபுரத்தில் உச்சியில் ஏறி குதிக்க தயாராவது போல பாவனைகாட்டி வந்தார் ஜீவா. இருள் சூழ்ந்த நிலையிலும் இறங்க மறுத்த அந்த குடிமகனை, தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மேலே ஏறி இருகப்பிடித்து பத்திரமாக மீட்டு வந்தனர்.
போதையில் இருந்த ஜீவா, தாசில்தாரின் காலில் விழுந்து தன்னை சாகடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்றிய தாசில்தார், ஜீவாவுக்கு தேவையான முதல் உதவிவழங்க அறிவுறுத்தினார்
தன்னை உடல் பரிசோதனை செய்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் தன்னுடைய வீர சாகசம் குறித்து விவரித்தார் போதை ஆசாமி ஜீவா
ஊரே கொரோனா பீதியில் தவித்திருக்க திருட்டு தனமாக போதையை ஏற்றிக் கொண்டதோடு, மின் கோபுரத்தில் ஏறி 3 மணி நேரம் போலீசாரை படாதபாடு படுத்திஎடுத்திய ஜீவாவை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
போதை எப்போதும் சமூக அமைதியை கெடுக்கும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
Comments