வீடு தேடிவரும் காய்கறி சேவையை நீட்டிக்க கோரிக்கை .! அனைத்து பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

0 2668

சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறி, மளிகைப்பொருட்கள் போன்றவற்றை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் சேவையை அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்ல பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வந்துச்செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது இன்றும் காவல்துறைக்கு பெரும்சவாலாக உள்ளது .

குறிப்பாக, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களுக்கு இதுபோன்று கடைவீதிகளுக்கு வந்துச்செல்வது என்பது கடினம். எனவே தான் மளிகை மற்றும் காய்கறிகள் 'டோர் டெலிவரி' செய்யும் முறை சில மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.

காய்கறிகள், கீரைகள், பழங்கள், பால் அரசி பருப்பு எண்ணெய் போன்ற அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் மக்களின் வசிப்பிடங்களுக்கே கொண்டு வழங்க சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ போன்ற நிர்வாகங்கள் முடிவெடுத்து அதனை முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ளது .

சிஎம்டிஏ இயக்கும் காய்கறி வாகனங்களில் ஒரு தடவைக்கு 75 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகள் கொண்டுச்சென்று விற்பனை செய்யப்படுவதாகவும், இரண்டு மணிநேரத்திற்குள் காய்கறிகள் விற்றுத்தீர்ந்து விடுவதாக கூறப்படுகின்றது

தனது வீட்டிற்கு தேவையான காய்கறிகளை முன்பதிவு செய்ய தொடர்ந்து முயன்றும் கிடைக்காத காரணத்தினால் காய்கறிகள் வாங்க வேறுவழியின்றி மார்கெட்டிற்கு வந்ததாக கூறும் ராஜ்மோகன், ஊரடங்கு உத்தரவு காலத்தில் பயனுள்ள இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கோரினார்.

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையும் இ தோட்டம் இணையதளம் வாயிலாக காய்கறி பழங்களை கொண்ட தொகுப்புகளை டோர்டெலிவரி செய்ய துவங்கியுள்ளது .

ஸ்விக்கி ஜோமோடோ போன்ற தனியார் செயலிகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை டோர்டெலிவரி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் காய்கறிகள் ஸ்டாக் இல்லாமல் போவது , டெலிவரி செய்வதற்கான கால அவகாசம் , நேரம் கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்களால் நடைமுறையில் இவை முழுமையாக சாத்தியப்படவில்லை என்று கூறப்படுகின்றது

வணிகர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சென்னை மாநகராட்சி வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க முன்வருபவர்களுக்கு அந்தந்த மண்டலங்களில் தடையில்லா பாஸ் கொடுக்க அறிவித்திருந்த நிலையில் வியாபரிகளை மண்டல அலுவலர்கள் பாஸ் வழங்க மறுத்து அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா தொற்றால் பொதுஇடங்களுக்கு வராமல் வீட்டிலேயே மக்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் காய்கறி பழங்களும் வீடுதேடிச்சென்று விற்பனை செய்வதும் தொடர்ந்து வீட்டிற்கே சென்று டெலிவரி செய்வதும் மிக மிக அவசியம் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments