சீட்டாடி சிக்கியதால் சிதைக்கப்பட்ட மைனர் .! முதுகு தோல் உரிந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீட்டாடிக் கொண்டிருந்த கும்பலை விரட்டிச் சென்ற உதவி ஆய்வாளர் ஒருவர், கையில் சிக்கிய உள்ளூர் நபர் ஒருவரை அடித்து அழைத்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் செல்வராகவன்.
மிடுக்கான உடலமைப்புடன் தன்னை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டுமென்று எப்போதும் பரபரப்பாக வலம் வரும் செல்வராகவனை அப்பகுதியினர் சிங்கம் என்று அழைப்பதால் குற்றம் செய்து சிக்குபவர்களை ரோட்டில் போட்டு புரட்டி எடுப்பது இவரது வழக்கம்.
இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செல்வராகவன், தொட்ட பேளூர் கிராமத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு அதிரடியாக களம் இறங்கினார்.
செல்வராகவனை பார்த்து அனைவரும் சிதறி ஓடிவிட, ஓட்டபந்தயத்தில் வெள்ளை சட்டை போட்ட உள்ளூர் மைனர் மாதேஷ் என்பவர் மட்டும் சிக்கிகொண்டார்.
தனியாக சிக்கிய மாதேஷை எஸ்ஐ செல்வராகவன் பிளாஷ்டிக்கிலான நீளமான பைப் கொண்டு கடுமையாக தாக்கி இழுத்து வந்தார்.
ஒரு கட்டத்தில் மைனர் மாதேஷை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியபடியே கண்மூடித்தனமாக அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.
சூதாட்டம் ஆடுபவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்வது சரியான நடவடிக்கைத்தான் என்றாலும் கையில் சிக்கியவரை கைபிள்ளை போல தாக்குவது காவல்துறையின் கண்ணியத்தை மீறும் செயல் என குற்றஞ்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எஸ்.ஐ.செல்வராகவன் தாக்கியதில் சீட்டாட்ட மைனரின் முதுகு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் புகார் கூறப்படுகின்றது.
சினிமாவில் போலீஸ் வேடம் போட்ட கதாநாயகர்கள் வேகம் காட்டினால் ரசிகர்கள் விசில் அடிப்பார்கள் நிஜத்தில் குற்றவாளியை பிடித்து இப்படி அடித்து உதைத்தால் மனித உரிமை அதிகாரிகள் கட்டம் கட்டி விடுவார்கள் என்பதை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் உணரவேண்டும்.
Comments