திவாலானவர் என அறிவிக்கப்படுவதில் இருந்து தப்பிய விஜய் மல்லையா
திவால் நடவடிக்கை கோரி, கடன் கொடுத்த இந்திய வங்கிகள் தொடர்ந்த வழக்கை லண்டன் மேல் நீதிமன்றம் ஒத்திவைத்ததால், திவாலானவர் என அறிவிக்கப்படுவதில் இருந்து விஜய் மல்லையா தப்பியுள்ளார்.
எஸ்பிஐ தலைமையிலான இந்திய வங்கிகளின் குழு, விஜய் மல்லையா மீது திவால் நடவடிக்கை கோரி, பிரிட்டன் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடர்ந்தது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தரவேண்டிய சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொடர்பாக, கர்நாடகத்தின் கடன் மீட்பு தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
திவால் நடவடிக்கை மற்றும் கம்பெனி விவகாரங்களுக்கான தலைமை நீதிமன்ற நீதிபதி பிரிக்ஸ் அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது. திவால் சட்டம் மற்றும் விதிகளுக்கு மாறாக, இந்திய வங்கிகள் வழக்கு தொடர்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இந்த அடிப்படையில் மனுவை தள்ளுபடி செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.
கடனை முழுமையாக திருப்பி அளிக்க தயார் என்று கூறி, இந்திய உச்சநீதிமன்றத்திலும், கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் மல்லையா செய்துள்ள முறையீடுகளை சுட்டிக்காட்டி, வழக்கை ஒத்திவைப்பதாகக் அவர் கூறினார்.
வங்கிகளிடம் வாங்கிய கடனை முழுமையாக திருப்பிச் செலுத்த முன்வந்த மல்லையாவுக்கு, அதற்கான அவகாசம் வழங்குவது குறித்து இந்திய நீதிமன்றங்கள் முடிவு செய்வதற்கு தேவையான காலகட்டத்தின் அடிப்படையில் வழக்கை குறைந்தது 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி பிரிக்ஸ் தெரிவித்தார்.
மல்லையாவின் மனுக்கள் இந்திய நீதிமன்றங்களில் ஏற்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, எந்த அடிப்படையில் மல்லையாவின் கோரிக்கையை வங்கிகள் நிராகரிக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினார். மல்லையா மீது திவால் நடவடிக்கை கோரி வங்கிகள் தொடர்ந்துள்ள வழக்கு எப்படிப்பார்த்தாலும் அசாதாரணமானது என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
தமது விவகாரத்தில் இந்தியாவில் அரசியல் தலையீடு இருப்பதாக மல்லையா தெளிவுபடுத்தினாலும், அது பிரிட்டன் நீதிமன்றத்திற்கு பொருட்படுத்தத் தக்கது அல்ல என்றும் நீதிபதி பிரிக்ஸ் கூறியுள்ளார்.
Comments