கூகுள் கிளாஸ்ரூம் - அதிகரிக்கும் பயன்பாடு..!
உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணைய வழி கல்விச் சேவையான "கூகுள் கிளாஸ்ரூம்" பயன்படுத்துவோர் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து, 10 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
கூகுள் கிளாஸ்ரூம் என்பது இணையத்தின் மூலம் வழங்கப்படும் இலவச சேவை. இதை பயன்படுத்த ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கு இருந்தால்போதும். ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்புகொள்ளவும், வீட்டுப்பாடங்கள் உள்ளிட்ட படிப்பு தொடர்பான அசைன்மென்ட்டுகளை அனுப்பவும் பயன்படுத்தப்படுகிறது. அவரவர் இடத்தில் இருந்தபடியே கற்றலையும்-கற்பித்தலையும் மேற்கொள்வதற்கு இந்த கூகுள் கிளாஸ்ரூம் இணைய சேவை பயனுள்ளதாக திகழ்கிறது.
இந்த சேவை ஏற்கெனவே அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் இதுவரை ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி வந்த இத்தாலி, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் கூகுள் கிளாஸ்ரூம் பிரபலமடையத் தொடங்கியுள்ளது என கூகுள் கல்விப் பிரிவுக்கான துணைத் தலைவர் அவ்னி ஷா (Avni Shah) தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இத்தாலியின் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வி முறையே, கூகுள் மென்பொருள்கள் உதவியுடன் இணைய வழி கல்விக்கு மாறியுள்ளது.
இதேபோல, வேறு பல நாடுகளிலும், கல்விக்கான கூகுள் சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் கூகுள் கிளாஸ்ரூம் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மார்ச் மாதத்திற்குப் பிறகு இரண்டு மடங்கு அதிகரித்து 10 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
இதேபோல, G Suite for Education எனப்படும், கூகுளின் இணைய வழி கற்றல்-கற்பித்தலுக்கான மென்பொருள் கருவிகளின் தொகுப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12 கோடியாக அதிகரித்துள்ளது. மீட் எனப்படும் கூகுளின் வீடியோகான்ஃபரன்சிப் ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் 25 மடங்கு அதிகரித்துள்ளது
Comments