மாட்டுத்தாவணி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத அவலம்: நள்ளிரவில் குவிந்த மக்கள் கூட்டம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு நள்ளிரவில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததோடு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காததால் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
தென் மாவட்டங்களிலேயே மிகவும் முக்கியமான சந்தைகளில் ஒன்று மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தை. இங்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 200 முதல் 250 பேர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும் என போலீசார் கூறி இருந்த நிலையில், திடீரென நள்ளிரவு 12 மணிக்கு முன்பே சாரை சாரையாக விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தை முன்பு குவியத் தொடங்கினர்
கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதோடு, விவசாயிகளும் வியாபாரிகளும் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பல மணி நேரமாக வரிசையில் நின்றனர். கூட்டம் அதிகரித்து கொண்ட சென்றதால் அனைவரும் கொடிய தொற்று நோயான கொரோனாவை மறந்துவிட்டு தனி மனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டனர்.
இதனால் அங்கு பணியில் இருந்த போலீசார் நூறு பேர் மட்டும் முதலில் உள்ளே அனுமதிக்கப்படுவர் என்றும், அவர்கள் திரும்பிய பின்னர் அடுத்த நூறு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என கூறினர். கொரோனா பரவல் குறித்து போலீசார் எவ்வளவு எடுத்து கூறியும் அதனை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அச்சமயத்தில் சில வியாபாரிகள் உள்ளே செல்ல முயன்றதால் போலீசார் சேலான தடியடி நடத்தினர். அப்போது அங்கிருந்த அனைவரும் முண்யடித்துக் கொண்டு சந்தைக்குள் சென்றுவிட்டனர். முறையான திட்டமிடலை போலீசார் நடைமுறை செய்யாததே இதற்கு காரணம் என புகார் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனி மனித இடைவெளி குறித்து விழிப்புணர்வுடன் இல்லாமல் இது போன்று செயல்படுவது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். மக்கள் பிறவற்றை எல்லாம் மறந்துவிட்டு மனப்பூர்வமாக ஊரடங்கை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.
Comments