கொரோனா நடவடிக்கைக்கு உதவும் ZOOM செயலி..!

0 5028

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தீவிர காவல் பணியில் ஈடுபட்டுள்ள சென்னை பெருநகர காவல்துறையினரை ஒருங்கிணைக்கும் வகையில், வீடியோ கால் வசதியுள்ள சூம் என்ற செயலி மூலம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

சென்னை பெருநகர காவல்துறை மொத்தத்தையும், ஒற்றை செயலி மூலம் ஒருங்கிணைத்து காவல் ஆணையர் திறம்பட வழி நடத்திவருவதாக தகவல் வெளியாகி உள்ளது

சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனின் கட்டுப்பாட்டில் 129 காவல் நிலையங்கள் உள்ளன. 2 கூடுதல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், 15க்கும் மேற்பட்ட துணை ஆணையர்கள், 50க்கும் மேற்பட்ட உதவி ஆணையர்கள், 300 க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் என அத்தனை காவல்துறையினரையும் இருந்த இடத்திலேயே மொத்தமாக ஒருங்கிணைக்க சூம் என்ற பிரத்யேக செயலியை சென்னை காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கிற்காக 24 மணிநேரமும் கால் கடுக்க நின்று காவல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அத்தனை காவல்துறை அதிகாரிகளையும் இந்த செயலி மூலம் ஒருங்கிணைத்து எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்தும் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து காவல் ஆணையர் உடனடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார்.

அந்தவகையில் சென்னையில் எந்தெந்த பகுதிகளுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை அறிந்து தேவையான உதவிகளை செய்ய ஆணையிட்டு வருகின்றார். வீட்டில் இருப்பு கொள்ளாமல், வீதியில் சுற்றுவோர் யார் ? என்பது குறித்த விவரங்களை அறிந்து, காவல் உயர் அதிகாரிகளுடன் வீடியோ காலில் பேசி உத்தரவுகளை எந்த ஒரு காலதாமதமுமின்றி வழங்க இந்த செயலி பேருதவியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

அதுபோல ஒரு இடத்தில் நடக்கின்ற சம்பவத்தை அலுவலகத்திலோ, அல்லது ரோந்துப் பணியில் இருந்தபடியோ காவல் ஆணையர், லைவ் வீடியோவை பார்க்கும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதால் நகருக்குள் நடக்கின்ற எந்த ஒரு நிகழ்வையும் விரைந்து அறிந்து அதற்கான தீர்வை காண முடிகிறது என்கின்றனர்.

இந்த சூம் செயலி மூலம் நேரில் சந்திக்காமல் கைகுலுக்காமல் விழிப்புணர்வோடு விரைவாக பணிகள் நடப்பதாக தெரிவிக்கும் காவல்துறையினர், அரசின் உத்தரவுகளை மதித்து மக்கள் வீட்டுக்குள் அடங்கி இருந்தாலே கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் பணியில் உள்ள காவல்துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் பாதி வேலைகள் குறையும் என வேண்டுகோள் விடுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments