கொரோனா வழிப்பறி வழுக்கி விழுந்த போலி காவலர்..! மாவுக்கட்டு பரிதாபங்கள்
சிவகங்கையில் ஊரடங்கை மதிக்காமல் வாகனத்தில் செல்வோரை மறித்து போலீஸ் என கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த போலி காவலர் கைது செய்யப்பட்டார். நிஜபோலீசிடம் தப்ப முயன்று கை ஒடிந்தவருக்கு மாவுக்கட்டு போடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சிவகங்கையை அடுத்துள்ள கூட்டுறவு பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் என்பவர் தான் காவல்துறையினருக்கு போட்டியாக வாகன சோதனைக்கு களம் இறங்கி கையை முறிகொடுத்தவர்..!
பல்சர் அருண்பிரகாஷ் மீது கொலை, கற்பழிப்பு, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தனது பல்சர் வாகனத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி, வாகன சோதனைக்கு களமிறங்கி உள்ளார்.
கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்ததுடன் மக்கள் யாரும் வெளியில் அதிகம் வரவேண்டாம் என்றும், அவ்வாறு வருபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதையும் அறிந்த அருண்பிரகாஷ் , காவல்துறையினர் இல்லாத பகுதிகளில் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து அடாவடி வசூலில் இறங்கியதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் பெருமாள்பட்டி விளக்கருகே வெள்ளலூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணனை மறித்து விதியை மீறி வெளியில் வந்ததாக கூறி அவரிடமிருந்த 7 ஆயிரத்து 750 ரூபாயையும், இளையராஜா என்பவரிடம் செல்போன் ஒன்றையும் பறித்தது சென்றதாக கூறப்படுகின்றது.
காய்கறி வியாபாரத்திற்கு சென்ற அன்னம்மாள் என்கிற பெண்ணிடம், விதியை மீறி வியாபாரம் செய்யவந்ததால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாக மிரட்டி 5 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டதுடன், தன்னை மதகுபட்டி காவல்நிலையத்தில் வந்து பார்க்க வேண்டும் எனவும் கூறிசென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து பணம் மற்றும் பொருளை இழந்தவர்கள் அவர் கூறிய காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்ததில் அப்படி யாரும் இல்லை என்பது தெரியவந்தது. தங்களுக்கு போட்டியாக வாகன சோதனைக்கு தனிக் கிளை தொடங்கிய கேடியைப் பிடிக்க களம் இறங்கியது காவல்துறை.
ஜேம்ஸ் பாண்டுக்கு நாட் நாட் செவன் போல வழிப்பறி செய்தவரின் பைக்கிற்கு செவன் செவன் சிக்ஸ் செவன் என்று நம்பர் உள்ளதாக போலீசில் போட்டு கொடுக்க லட்டாக சிக்கினார் பல்சர் அருண்பிரகாஷ். திருமலை அருகே அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்த போது, இருசக்கர வாகனத்தில் சுற்றி சுழன்று தப்ப முயன்று... கீழே விழுந்த வேகத்தில் அருண்பிரகாஷின் இடது கையில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
தங்கள் பெயரை சொல்லி பணம் பறித்த வழிப்பறி கொள்ளையனாக இருந்தாலும் அவனை மனித நேயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று மாவுக்கட்டுபோட்டு விட்டனர் நிஜ போலீசார்..!
ஊரடங்கு நேரத்தில் ஊருக்கு மட்டுமல்ல, போலீசுக்கும் அடங்காமல் அட்டகாசம் செய்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆறிருள் உய்த்துவிடும் என்பதை அறிந்தாவது வீட்டிலேயே அடங்குவோம் விழிப்புணர்வோடு..!
Comments