கொரோனா பாதிப்பு: 15 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. புதிதாக இன்று 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் உலகில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிகபட்சமாக ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 4,300 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்துள்ளது. அதற்கடுத்தபடியாக பெல்ஜியத்தில் ஆயிரத்து 600 பேருக்கும், ரஷ்யாவில் ஆயிரத்து 500 பேருக்கும் இன்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் 63 பேருக்கும், பாகிஸ்தானில் 151 பேருக்கும், மலேசியாவில் 100க்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இதற்கடுத்து ஸ்பெயின் 2ம் இடத்திலும், இத்தாலி 3ம் இடத்திலும், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை நான்கு மற்றும் 5ம் இடத்திலும் உள்ளன.
அதேபோல் கொரோனாவுக்கு உலகம் முழுவதும் மேலும் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஸ்பெயினில் அதிகபட்சமாக 446 பேர் பலியாகியுள்ளனர். பெல்ஜியத்தில் 283 பேரும், நெதர்லாந்தில் 148 பேரும் மரணமடைந்துள்ளனர்.
புதிதாக பலியானோரையும் சேர்த்து உலகில் கொரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுவரை சிகிச்சைக்கு பிறகு 3 லட்சத்து 37 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 11 லட்சத்து 5 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், அவர்களில் சுமார் 48 ஆயிரத்து 200 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments