தப்லிக் ஜமாத் சார்பாக சென்னை வந்த 29 பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதி !

0 2804

குஜராத்தில் இருந்து தப்லிக் ஜமாத் சார்பாக வந்து, சென்னை சூளை பகுதியில் தங்கியிருந்த 29 பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தங்கியிருந்த 38 பேருக்கும் சேர்த்தே  கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து, மார்ச் 9ஆம் தேதி, 13 நபர்கள் கொண்ட தப்லிக் ஜமாத் குழு சென்னை வந்துள்ளது.

மார்ச் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை புரசைவாக்கம் பகுதியிலுள்ள மசூதிகளில் தங்கியும், மார்ச் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தேனாம்பேட்டையில் உள்ள மசூதிகளில் தங்கியும் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மார்ச் 21ஆம் தேதி மாலை முதல், சூளை பகுதியில் சட்டண்ணன் தெருவில் உள்ள அரபு பாடசாலையில் தங்கியுள்ளனர். இதேபோல, மார்ச் 11ஆம் தேதி 16 நபர்கள் அடங்கிய மற்றொரு குஜராத் குழு சென்னை வந்து, மார்ச் 12 முதல் 17 வரை பெரியமேடு பகுதியில் உள்ள மசூதிகளில் தங்கியும், 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி மாலை வரை கொளத்தூர் பகுதியிலுள்ள மசூதிகளில் தங்கியும் தப்லிக் பணி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த குழுவும் மார்ச் 24ஆம் தேதி மாலை முதல் சட்டண்ணன் தெரு அரபுப் பாடசாலை வளாகத்தில் தங்கியுள்ளனர்.

ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னரே, மார்ச் 9 மற்றும் மார்ச் 11 ஆகிய தேதிகளில் இரண்டு குழுக்களாக வந்துள்ளனர். மார்ச் 24ஆம் தேதி மாலை தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரபுப் பாடசாலை வளாகத்திலேயே தங்கிவிட்டனர்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தப்லிக் ஜமாத் மாநாடு சென்று வந்தவர்களை கண்டறியும் பணி தொடங்கிய பிறகு, இந்த 29 பேரும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வந்துள்ளனர். 29 பேரும், அரபு பாடசாலையில் சுய தனிமைப்படுத்தலில் இருந்துள்ளனர்.

இதில், 80 வயது குஜராத் நபருக்கு வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதால், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் இன்று அழைத்துச் செல்லப்பட்டார்.

அரபு பாடசாலையில் அவருடன் தங்கியிருந்த குஜராத்தைச் சேர்ந்த மற்ற 28 நபர்கள், அங்கிருந்த மேலாளர் மற்றும் பணியாட்கள் என மொத்தம் 38 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 மாநகரப் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதனிடையே, அரபுப் பாடசாலை அமைந்துள்ள சட்டண்ணன் தெரு மற்றும் அதை ஒட்டி அமைந்துள்ள இரண்டு தெருக்கள் என மொத்தம் 3 தெருக்கள் சீல் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments