சாலைகளில் முடங்கிக் கிடக்கும் ரூ.35,000 கோடி மதிப்புடைய சரக்குகள்
35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சரக்குகளுடன் சுமார் மூன்றரை லட்சம் சரக்கு லாரிகள் நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக சாலைகளில் முடங்கியுள்ளன.
மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டதால் பல ஆயிரம் ஓட்டுனர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்கள், பைக்குகள், ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் , மின்சார மற்றும் மின்னணு சாதனங்கள், தொழிற்சாலைகளுக்கான கச்சா பொருட்கள், ரசாயனம், ஸ்டீல், சிமெண்ட் போன்ற பல்வேறு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.
அரிசி, கோதுமை, காய்கறி ,எண்ணெய், பெட்ரோல் ,குடிநீர், மருத்துவம் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்குத் தடையில்லை. ஆனால் இதரப் பொருட்களுடன் செல்லும் சரக்கு வாகனங்கள் பல்வேறு நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே கடந்த 15 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பொருட்கள் சேதம் அடையவும் களவு போகவும் வாய்ப்புகள் உள்ள நிலையில் அவற்றை இரவும் பகலும் கண்காணிக்கும் பணியில் ஓட்டுனர்கள் வீடு திரும்ப முடியாமல் அடைகாத்து வருகின்றனர். பொருட்களை இறக்குவதற்கும் உதவியாளர்கள் கிடைப்பதில்லை. அனைத்து வகை சரக்குகளையும் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோருகின்றனர்
Comments