கொரோனாவை பரப்பியதாக தப்ளிக் மதகுருக்கள் மீது வழக்கு ..! தமிழக போலீஸ் அதிரடி
வங்கதேசம், தாய்லாந்து,இந்தோனேசிய நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியாவுக்குள் புகுந்து, சட்ட விரோதமாக மதப்பிரச்சாரங்களில் ஈடுபட்டதுடன், கொரோனா நோயின் அறிகுறி இருப்பது தெரிந்தும், நோய் பரவுதலுக்கு காரணமாக இருந்ததாக தப்லிக் மதகுருக்கள், அவர்களுக்கு உதவிய உள்ளூர் தப்லிக் ஜமாத்தார் என மொத்தம்`129 பேர் மீது தமிழக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 738 பேரில் டெல்லியில் நடந்த தப்ளிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள், தொடர்புடையவர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என 679 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதன்கிழமை மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
டெல்லி மாநாடு..! டெல்லி தனியார் நிகழ்ச்சி..! ஒரே சோர்ஸ்..! ஒரே தொற்று..! என்று பலவிதமான பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இவர்களுக்கு தேவையான சிகிச்சையை தமிழக அரசு சிறப்பாக வழங்கி வருகின்றது.
இந்த நிலையில் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்குள் புகுந்து சட்டத்தை மீறி மதப்பிரச்சாரங்களில் ஈடுபட்டதோடு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் தங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மதப்பிரச்சாரம் மேற்கொண்டு நோய்த் தொற்று பரவ காரணமாக இருந்ததாக வங்கதேசம், தாய்லாந்து இந்தோனேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளி நாடுகளை சேர்ந்த தப்லிக் மதகுருமார்கள், உடந்தையாக இருந்த உள்ளூர் தப்லிக் ஜமாத் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்
அதன்படி ஈரோட்டில் தாய்லாந்தை சேர்ந்த மதக்குருக்கள் 6 பேர் மீதும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தங்கி மதப் பிரச்சாரம் செய்த இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தில் மத பிரச்சாரம் செய்து வந்த 11 இந்தோனேசிய மதகுருக்கள் உள்ளிட்ட 16 பேர் மீதும், மதுரை மாவட்டம் மலைப்பட்டியில் தாய்லாந்தை சேர்ந்த 8 மதகுருக்கள் உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் பலர் சிகிச்சையில் இருப்பதால் உடல் நலம் சீரான பின்னர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
அதே போல வங்கதேசத்தில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு மதப்பிரச்சாரத்துக்கு வந்து விசாக்காலம் முடிந்த பின்னரும் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 11 மதக்குருக்களையும் அதிரடியாக கைது செய்த காவல்துறையினர் அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.
அதே போல மயிலாடுதுறை அடுத்த நீடூர் மதரசாவில் பதுங்கி இருந்த மதகுருக்களான பிரான்ஸை சேர்ந்த 5 பேர், காமரூன் நாட்டை சேர்ந்த 3 பேர், காங்கோ , பெல்ஜியம் நாட்டை சேர்ந்த தலா ஒருவர், பீகார், மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 12 பேர் மீது தடையை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களது பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பெரிய மேட்டில் பதுங்கி இருந்த, வங்கதேசத்தைச் சேர்ந்த 3 மதக்குருக்களையும் சுற்றிவளைத்த காவல்துறையினர் அவர்களின் பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றி, கொரோனா பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பேசின் பிரிட்ஜ் சட்டண்ணன் தெருவில் உள்ள தப்லிக் அரபு பாடசாலையில் பதுங்கி இருந்த குஜராத்தை சேர்ந்த மதகுருக்கள் 29 பேர், பாடசாலை மேலாளர் மற்றும் ஊழியர்கள் 10 பேர் என மொத்தம் 39 பேர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்
மேலும் சிவகங்கையில் 11, ராமநாதபுரத்தில் 8, திருவாருரில் 13, காஞ்சிபுரத்தில் 10 பேர் என தமிழகத்தில் இதுவரை ஒட்டு மொத்தமாக தப்லிக் வெளிநாட்டு மதகுருக்கள் அவர்களுக்கு உதவிய உள்ளூர் தப்லிக் ஜமாத்தார் என 129 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு வேண்டுகோள் விடுத்த பின்னரும் சிகிச்சைக்கு வராமல் பதுங்கி இருந்தவர்களை மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments