தற்போது நாடு சமுதாய அவசரநிலையில் உள்ளது - பிரதமர் மோடி
ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் பரிந்துரைத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தகவல் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், வருகிற 11ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாட இருப்பதாகவும், அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க வீடுகளில் மக்கள் தனித்திருத்தலின் அவசியம் என்பதை வலியுறுத்தும் நாடு தழுவிய ஊரடங்கு, வருகிற 14ஆம் தேதி நிறைவடைகிறது. ஊரடங்கு முடிந்து, மக்கள் வெள்ளமென திரண்டால், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட முடியாத அளவிற்கு சென்று விடும் என மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் அச்சம் தெரிவிப்பதோடு, ஊரடங்கை நீட்டிக்க கோரி வருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன், இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், இந்த தகவலை, பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க, பல்வேறு மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், பல்வேறு துறைகளின் நிபுணர்கள், ஊரடங்கை நீட்டிக்குமாறு பரிந்துரைத்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மருத்துவ அவசர நிலையில் உள்ள நாட்டின் தற்போதைய நிலைமை என்பது, சமூக அவசர நிலைக்கு ஒத்ததாகும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகியிருப்பதாகவும், பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுநோயால் அனைத்துலக நாடுகளும், கடுமையான சவாலை எதிர்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய நிலைமை, மனித குல வரலாற்றில், ஒரு சகாப்தத்தையே மாற்றியமைக்க கூடிய அளவிற்கான அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
எனவே, மனித குல வரலாற்றுக்கே அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் கொரோனாவை எதிர்த்து, அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளதாகவும், பிரதமர் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் பணியில், மத்திய அரசுடன் இணைந்து, மாநில அரசுகள் சிறப்பாக பணியாற்றுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11ஆம் தேதி காணொலி காட்சி மூலம் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Comments