அரசியல் தலைவர்களுடன் மோடி இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நாடாளுமன்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
நாடாளுமன்றத்தில் 5 எம்பிக்கள் அதற்கு மேற்கொண்ட எண்ணிக்கையைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடவும் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஊரடங்கை தளர்த்துவதா நீட்டிப்பதா என்பது குறித்தும் அரசியல் கட்சிகளின் கருத்துகளை மோடி கேட்க உள்ளார்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள், அதிலிருந்து மீளும் வழிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு நிதியுதவி கோரி வருகின்றன. இதனால் மத்திய அரசு புதிய திட்டங்களையும் இக்கூட்டத்தை அடுத்து அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாட்டின் அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பு- விநியோகம், மருத்துவ வசதிகள் உள்பட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Comments