ஏப்ரல் 15க்கு பிறகு.. ஊரடங்கை விலக்கணுமா? அப்படினா இதை செய்ங்க..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வருகிற ஏப்ரல் 15ந்தேதிக்கு பின்னரும் 22 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு ஆரம்பித்து 14 நாட்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் சாப்பாட்டிற்கே வழியில்லை... என்று கும்பலாக வீதியில் அமரும் இத்தகைய பெண்களின் கைகளுக்கு காவல்துறையினரால் உணவுப் பொட்டலங்கள் கிடைத்ததும் பவ்யமாக வீட்டுக்கு செல்கின்றனர்..! இன்னும் 7 நட்கள் கழித்து, அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீடித்தால் உணவுக்காக சாலையை மறிக்கும் இவர்களின் நிலை என்னவாகும்?
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 690 பேரில் 149 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் வசித்த பகுதிகள் முற்றிலும் சீல் செய்யப்பட்டு விட்டன. அங்கிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வாகனங்களில் இஷ்டத்துக்கு செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்ட நிலையிலும், பொறுப்பில்லாமல் வாகனத்தில் சுற்றும் சிலர் காவல்துறையினரின் வெறுப்புக்குள்ளாகி வருகின்றனர்
கோவையை சேர்ந்த 60 பேரும், திண்டுக்கல்லை சேர்ந்த 45 பேரும், திருநெல்வேலியை சேர்ந்த 38 பேரும், ஈரோட்டை சேர்ந்த 32 பேரும், திருச்சியை சேர்ந்த 30 பேரும் என சென்னைக்கு அடுத்து கொரோனா டாப் 5 மாவட்ட பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர். அப்படி இருந்தும் ஈரோட்டில் எல்லாம் தனி மனித விலகல் குறித்த விழிப்புணர்வே இன்னும் வரவில்லை.
அடுத்து நாமக்கல் 28, ராணிப்பேட்டை 27, செங்கல்பட்டு 24, மதுரை 24, கரூர் 23, தேனி 23, தூத்துக்குடி 17, விழுப்புரம், திருப்பூர் தலா 16, கடலூர் 13, சேலம்,திருவள்ளூர்,திருவாரூர், விருது நகர், தஞ்சாவூரில் தலா 12 பேர் என கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இங்கும் சிலர் வீட்டுக்குள் அடங்குவதில்லை
நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருவண்ணாமலையில் தலா 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விழிப்புணர்வு இன்றி வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளை வலுக்கட்டாயமாக கையை கழுவி வேப்பிலை சாப்பிடவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி மக்கள் பொறுப்பில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்தால் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துவது எல்லை மீறி போய்விடும் என்று பல முறை எச்சரித்தாலும் கேட்பதில்லை.! ஆனால் ஏப்ரல் 14ந்தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வர வேண்டும் என்று மட்டும் விரும்புகிறார்கள். மருந்து சாப்பிடாமல் நோய் குணமாகவேண்டும் என்று நினைப்பது போல.!
வருகிற ஏப்ரல் 14 ந்தேதியுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மேற்கண்ட 22 மாவட்டங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் வெளி நபர்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களில் 15 லட்சம் வீடுகள் கண்காணிக்கப்பட்டு 53 லட்சம் மக்களை தனித்திருக்க அறிவுறுத்தியுள்ளதால் படிப்படியாகவே 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் சூழல் உள்ளதாக கூறப்படுகின்றது.
ஏனெனில் தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்பதால் இதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளதாகவும், 6 மணி நேரத்திற்குள் கொரோனாவை கண்டறியும் ரேபிட் சோதனை கிட்டை தமிழக சுகாதாரத் துறையினர் பயன்படுத்த உள்ளதால் எளிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து ஆரம்ப கட்டத்திலேயே நோயை குணமாக்க இயலும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர்.
அதே நேரத்தில் ரகசியம் காப்பதாக நினைத்து கொரோனா பாதிக்கப்பட்டவரின் பெயர் முகவரியை மறைப்பதால் அவருடன் தொடர்பில் இருந்த பலரும் தங்களை அறியாமலேயே கொரோனாவை பரப்பும் சூப்பர் ஸ்பிரட்டர்களாக சமூகத்தில் வலம் வரும் அபாயம் இருப்பதால், ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு பின்னர் கூட திரையரங்குகள், மால்கள், திருமண மண்டபங்கள், மதவழிபாட்டு இடங்கள் மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என்றே கூறப்படுகின்றது.
மக்கள் ஊரடங்கை பின்பற்றி, தனி மனித விலகலை முழுமையாக கடைப்பிடித்தால் கொரோனா பரவலை தடுப்பதோடு, தமிழகத்தில் சீக்கிரம் இயல்பு நிலை திரும்பவும் வழிகிடைக்கும், அதற்கான விருப்பம் மக்கள் கையில் என்கின்றனர் காவல் உயர் அதிகாரிகள்..!
Comments