ஊரடங்கு நீட்டிப்பா..? இதுவரையில் இல்லை... மத்திய அரசு விளக்கம்

0 6769

கொரோனா தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நாடு தழுவிய முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு கூறியிருக்கிறது.

கொரோனா பரவலைத் தடுக்கும் முகமாக, மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊடரங்கு கடைபிடிக்கப்பட்டது. மார்ச் 24ஆம் தேதி முதல், நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்க, வெளியில் நடமாடாது வீடுகளில் தனித்திருத்தல் அவசியம் என்ற நோக்கத்தின் அடிப்படையில், ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்த முழு ஊரடங்கு, வருகிற 14ஆம் தேதி நிறைவடைய உள்ளது. தற்போது, கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்திருப்பதால், ஊரடங்கை, மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

ஊரடங்கு முடிந்து, மக்கள் வெள்ளமென திரண்டால், தொற்றுநோய் பரவலை தடுப்பது இயலாத காரியமாகிவிடும் என பல்வேறு துறை நிபுணர்களும் பரிந்துரைந்தனர்.

இதை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், நாடு தழுவிய ஊரடங்கை நீட்டிக்க நடுவண் அரசு யோசனை செய்து வருவதாகவும், ஏ.என்.ஏ செய்தி நிறுவனம், பிற்பகலில் தகவல் வெளியிட்டது.

இதுகுறித்து., டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் லவ் அகர்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வருகிற 14ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

சில மாநிலங்கள், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரியிருப்பது உண்மை தான் என்று கூறிய அவர், அதன் மீது, உரிய முடிவு எடுக்கப்படும்போது, முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதுவரையில் ஊகங்களை கிளப்பி, வதந்திகளை பரப்ப வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments