சாலையில் தோப்புகரனம் பிள்ளையார் கண்ணீர்..! பாடம் நடத்தும் போலீஸ்
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வலம் வந்த வாகன ஓட்டிகள் சாலைகளில் தோப்புக்கரணம் போட்டுவரும் நிலையில், ஆடவருக்கும் மகளிருக்கும் பாரபட்சமின்றி கற்றுக் கொடுக்கும் போலீசாரின் பவர் டாஸ்க் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கொரோனா நோய் பரவுதலில் 3 ஆம் கட்டமான சமூக தொற்றில் நம் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற அக்கறையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனை பற்றிய புரிதல் இல்லாமல் வெளியே போனா, கொரோனா என்ன கடிச்சா வச்சிரும் ? என்று எகத்தாளம் பேசி கிரிக்கெட் ஆட கும்பலாக வந்த பிரம்மதேசம் பகுதி புள்ளீங்கோக்களை போலீஸ் பிடிச்சி வச்சி செஞ்சிட்டாங்க..!
இடுப்பு வலிப்பதாக கதறிய தம்பிகளுக்கு போலீஸ் பயிற்சியின் போது வழங்கப்படும் பவர் டாஸ்க் கொடுத்து பிதுக்கி எடுத்தார் டி.எஸ்.பி. கனகேஸ்வரி..!மாலையில் ஆரம்பித்த பவர் பயிற்சிகள் இருள் சூழ்ந்த பின்னரும் தொடர்ந்ததால், ஆரம்பத்தில் விழுந்து விழுந்து தில்லாக பயிற்சி செய்த உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கு அல்லு கழண்டது..!
அதே போல பெரியகுளம் காந்தி சிலை அருகே வாகனத்தில் வலம் வந்து போலீசிடம் வசமாக சிக்கிய வள்ளல்கள் தங்கள் வண்டி சாவியை பறிகொடுத்தனர்..!வரலாற்று ஆய்வாளர் போல வலம் வந்த உள்ளூர் பாகியான்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களுக்கு தோப்புக்கரணம் போட்டு துள்ளிகுதிக்கும் டாஸ்க் கொடுத்து வாட்டி எடுத்தனர்
பின்னர் சாவிகளை கொடுத்து வீணாக வீதியில் சுற்றக்கூடாது என்று எச்சரித்து விரட்டி அனுப்பினர். அதே போல திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேவிகாபுரத்தில் மாஸ்க் போடாமல் சுற்றியவர்களுக்கு தோப்புக்கரண டாஸ்க் கொடுத்து பெண் காவல் ஆய்வாளர் வகுப்பு எடுத்தார்
சிலர் தோப்புக்கரணம் போடாமல் டிமிக்கி கொடுக்க பிள்ளையார் கோவிலில் போடுவது போல குனிந்து,நிமிந்து போடுங்க, கைகால்கள் பலமாகும் என்று ஏட்டையா ஒருவர் புத்தி சொன்னார்.இதற்கிடையில் மாங்காட்டில் உள்ள வைகுண்டபிள்ளையார் கோவில், பிள்ளையார் சிலையில் இருந்து கண்ணீர் வருவதாக தகவல் பரவியது.
இதனை ஆர்வத்துடன் காண கூடியவர்கள், விழிப்புணர்வு இன்றி கும்பலாக சுற்றும் பொறுப்பில்லாத மனிதர்களை நினைத்து, வேதனையில் பிள்ளையார் சிலையில் இருந்து கண்ணீர் வந்திருக்கும் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வட சென்னையின் புளியந்தோப்பில் கும்பலாக சீட்டாடி சிக்கிய சூதாட்ட புள்ளீங்கோக்களை போலீசார் கரகாட்டம் மட்டும் தான் ஆடச்சொல்லவில்லை, குழு தோப்புக்கரணம், கொல கொலயா முந்திரிக்கா, தவளை ஓட்டம் என இடமே களைகட்டியது
ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றி கொரோனாவுடன் வீட்டிற்கு சென்றால் குடும்பத்தையும் அந்த கொடிய வியாதி தொற்றிக்கொள்ளும் என்பதை உணர்ந்தாவது இனி வீட்டில் அடங்குங்கள்..!
Comments