கொரோனாவை ஒழிக்க ஊருக்குள் வேலிபோட்டு கல்வீச்சு போர்..!

0 7759

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இரு கிராமங்களுக்கு இடையே கொரோனாவை தடுக்க போடப்பட்ட முள்வேலி காரணமாக எழுந்த கல்வீச்சு மோதலில் 50க்கும் மேற்பட்டோரின் மண்டை உடைந்தது

கரோனா வைரஸ் தொற்று சர்வதேச அளவில் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாட்டு எல்லைகளும், மாநில எல்லைகளும் மாவட்டம் எல்லைகளும் மூடப்பட்டு விட்டன.

இதனை பார்த்த ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் அருகருகே ஒட்டியிருக்கும் கிராமங்களான லட்சுமிபுரம், கொத்தூர் கிராமத்து இளைஞர்கள் செய்த முன் எச்சரிக்கை நடவடிக்கை தான் தற்போது 50 பேரின் மண்டையை பதம் பார்த்துள்ளது.முதலில் லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வருத்த படாத வாலிபர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து தங்கள் ஊருக்கு புதியவர்கள் யாரும் வராத வகையில் கொத்தூர்,லட்சுமிபுரம் இடையே உள்ள சாலையை மறித்து முள் வேலி போட்டனர்.

பதிலுக்கு கொத்தூர் கிராமத்து இளைஞர் அணியும், தங்கள் ஊருக்கு புதியவர்கள் வருவதை தடுக்கும் வகையில் சாலையில் வேலி அமைத்து கொரோனா தடுப்பை ஏற்படுத்தினர்...! இதனால் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உருவானது.

ஒரு கட்டத்தில் ஊருக்குள் அடங்கி இருந்த இரண்டு கிராமங்களை சேர்ந்தவர்களும் சாலையில் வேலி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட தகராறு முற்றி இருதரப்புக்கும் இடையே கைகலப்பானது. அப்போது இரு ஊர் இளைஞர்களும் ஒருவர் மீது ஒருவர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இரண்டு ஊர்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் சாலையில் திரண்டு ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால், அந்த பகுதியே போர்க்களம் போல காணப்பட்டதுஇதில் 50க்கும் மேற்பட்டோருக்கு மண்டை உடைந்ததை யடுத்து கல்வீச்சு போருக்கு ஓய்வு கொடுத்த கிராம மக்கள், வேலியை பிரித்து போட்டு விட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளை தேடிச்செல்ல தொடங்கினர். அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் பணியில் இருந்தவர்கள் கொரோனா சிகிச்சைக்கு மட்டுமே முன்னுரிமை என்று திருப்பி அனுப்பியதால் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உதவி கோரினர்.

விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த கல்வீச்சு வீரர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊருக்குள் வராமல் இருக்க சாலையை மறித்து வேலி போட்டு..! அந்த வேலியை பிரிக்க சண்டை போட்டு..! எங்கு கொரோனாவுக்கு சிகிச்சை நடக்கிறதோ அங்கே சென்று காயத்துக்கு கட்டு போட்டது தான் சூப்பர் டுவிஸ்ட்..! விழிப்புணர்வு இருக்க வேண்டியது தான், அதற்காக இது போல முரட்டுத்தனமாக விழிப்புணர்வு பொங்கி வழிந்தால், இறுதியில் மண்டை உடைந்து ரத்தம் வலியும் நிலை உருவாகும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments