கொரோனா தாக்குதலில் சின்னாபின்னமான ஐரோப்பிய நாடுகள்
உலகையே உலுக்கி வரும் கொரோனாவின் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதனிடையே நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 488 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் கொடூரக் கரங்களில் சிக்கி இப்பூவுலகம் சின்னாபின்னமாகி வருகிறது.
கொலைகார நோய்த் தொற்றினால் தினசரி நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். வைரசின் தாக்குதலால் இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 64 ஆயிரத்து 672 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 324 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிரமான நோய்த் தொற்றின் காரணமாக பிரான்ஸ் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 53 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் கொரோனாவால் புதிதாக கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதில் நேற்று மட்டும் 750 பேர் மரணித்ததால் இதுவரை 11 ஆயிரத்து 947 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இங்கிலாந்தில் ஏறத்தாழ 42 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகம் பேர் பலியான இத்தாலியில் ஒன்றேகால் லட்சம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 169 பேர் மரணித்துள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கையோ ஆயிரத்து 444 ஆக கூடியுள்ளது. ஆனால் சீனாவில் எந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கையோ, உயிர் பலியோ பதிவாகவில்லை.
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் தலா 150 பேர் வரை பலியாகி உள்ளதால் இருநாடுகளிலும் இணைந்து சுமார் 3 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து ஆசிய நாடான ஈரானில் நேற்று மட்டும் 158 பேர் கொரோனாவின் கொடூரத் தாக்குதலுக்கு பலியாகினர். இதனால் அந்த நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 452 பேர் மரணித்துள்ளனர்.
Comments