கொரோனா பரிசோதனைக்கு சென்ற.. மருத்துவக் குழுவுக்கு அடி உதை..!
டெல்லி தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றதால் கொரோனா பாதிப்பு உறுதியான நபரின் கிராமத்திற்கு பரிசோதனைக்கு சென்ற அரசு மருத்துவகுழு அடித்து விரட்டப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரங்கேறி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார் ஊத்து கிராமத்தை சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பினார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அய்யனார்வூத்து கிராமத்தை தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவித்த மாவட்ட நிர்வாகம், அந்த கிராமத்தை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு சனிக்கிழமை மாலையில் மருத்துவ குழுவினர், தாசில்தார் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோருடன் சென்றனர்.
சோதனை முடிந்து குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு புறப்பட தயாரான மருத்துவ குழுவினரை செல்ல விடாமல் தடுத்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். திடீரென மருத்துவ குழுவினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் சுகாதார ஆய்வாளர் காளிராஜின் சட்டை கிழிந்தது. செல்போனை பறித்துக்கொண்டு பைக்கையும் சேதப்படுத்தினர்.
நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட தாசில்தார் பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர், ஒருவழியாக அங்குள்ள ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ குழுவினரையும், குடும்ப உறுப்பினர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மருத்துவ குழு தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவ துறையினருக்கு தெரிந்து கயத்தாறு அரசு ஆஸ்பத்திரியில் கூடினர். அதன் பின்னர் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு வேண்டுமெனவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை ஏற்று சுகாதார ஊழியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாகவே முன் எச்சரிக்கையுடன் குடும்பத்தினரை சிகிச்சைக்கு அழைத்து செல்கிறார்கள் என்ற புரிதல் கூட இல்லாமல் தாக்குதல் நடத்துவது கடுமையாக கண்டிக்கதக்கது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அதே நேரத்தில் மருத்துவ பணியாளர்களை தாக்கிய வன்முறை கும்பலை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments