கொரோனா ஆபத்தை உணராத மக்கள்.. ரேசன் கடைகளில் முண்டியடித்த அவலம்
சென்னையில் பல ரேசன் கடைகளில், தனி மனித இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டு, கொரோனா நிவாரணப் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால், நோய்த்தொற்றை தடுக்கும் அரசின் முயற்சி தடைபடுகிறதா என்பது பற்றிய செய்தி தொகுப்பு...
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பாதிப்புக்குள்ளான மக்கள் பயன் பெறும் வகையில், தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, பாமாயில் அகியவற்றை ரேசன் கடைகளில் இலவசமாக வழங்குகிறது. முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடைமுறை முன்னெடுக்கப்பட்டபோதும், பல இடங்களில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும், கொரோனா அச்சமின்றியும் கூட்டமாக வந்து முண்டியடித்தனர்.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் போலீசார் திணறியதால், 7-ஆம் தேதி முதல் குடும்ப அட்டை தாரர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என அரசு மறு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள பல ரேசன் கடைகளில் மொத்தமாய் குவிந்த மக்கள் ஒட்டி உரசியபடி நின்றிருந்தும், சிலர் கொடிய கொரோனாவின் வீரியத்தை அறியாமல் தங்களது கை குழந்தைகளுடள் வந்தும் பொருட்களை பெற்றுச்சென்றனர்.
கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், சில அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்முயற்சிகள் முழுமை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே, இனியாவது பாதுகாப்பான முறையில் அரசின் திட்டங்கள் மக்களிடம் சேரும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
Comments