அண்ணாத்த கடை இழுத்து பூட்டி சீல் - கூடுதல் விலையால் நடவடிக்கை

0 10491

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில், இரு மடங்கு விலையில் கொள்ளை லாபத்துக்கு மளிகைப் பொருட்களை விற்ற கடையை பூட்டி, ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சீல் வைத்தனர். 10 ரூபாய் மஞ்சள் பொடி பாக்கெட்டை 30 ரூபாய்க்கு விற்ற அண்ணாத்தேயின் அட்டகாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் வேலைக்கு செல்ல இயலாமலும் தங்கள் தொழில்களை செய்ய இயலாமலும் பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள் தவித்து கிடக்க, அத்தியாவசியம் என்ற அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட மளிகைக் கடை உரிமையாளர்களில் சிலர் கொரோனா கிருமியை விட கொடிய விஷக்கிருமியாக மாறி கொள்ளை லாபத்துக்கு பொருட்களை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் டி.எம் ஸ்டோர் என்ற பெயரில் மளிகைகடை நடத்திவரும் மணி என்பவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாக்கெட்டுகளை கிழிக்காத குறையாக ஒவ்வொரு பொருளுக்கும் 2 மடங்கு முதல் 3 வரை விலையை உயர்த்தி கொள்ளை லாபத்துக்கு விற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து டி.எம்.ஸ்டோர் கடைக்கு சோதனைக்கு சென்ற குடிமை பொருள் பாதுகாப்பு மற்றும் பதுக்கல் தடுப்புத்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக் கொண்டார் மளிகைக் கடை அண்ணாத்தே மணி. அதிக பட்ச சில்லரை விலையாக 10 ரூபாய் கொண்ட மஞ்சள் பொடியை 30 ரூபாய்க்கும், 20 ரூபாய் மதிப்புள்ள சிறிய தேங்காயை 40 ரூபாய்க்கும் சீனி, பருப்புவகைகள் என அனைத்து மளிகை பொருட்களையும் இஷ்டத்துக்கு விலையேற்றி விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற வாடிக்கையாளர்களும் மணியின் கொள்ளை குறித்து குற்றஞ்சாட்ட, அவரிடம் இருந்து கடை சாவியை கைப்பற்றிய அதிகாரிகள் கடைக்கு பெரிய பூட்டாக போட்டனர். பூட்டு மீது வெள்ளை துணியால் சுற்றி அரசு முத்திரையுடன் சீல் வைத்து கடையை தொடர்ந்து நடத்த தடை விதித்து சென்றனர்.

இந்த கடை மட்டுமல்ல, தமிழகத்தில் சென்னை தொடங்கி பெரும்பாலான ஊர்களில் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என்று கூறி சாமானிய மக்களுக்கு 3 மடங்கு லாபத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது. சம்பந்தப்பட்ட மளிகைப் பொருட்கள் தடுப்பாடின்றி கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மொத்த வியாபாரிகள் , 25 கிலோ எடை கொண்ட சர்க்கரை மற்றும் பருப்பு மூட்டைக்கு 100 ரூபாய் வரை உயர்த்தி விற்றால், சில்லரை வியாபாரிகள் கிலோவுக்கு 50 ரூபாய் வரை ஏற்றி விற்பதாகவும், விலை உயர்வு பற்றி கேட்டால் தாங்களே சென்று பொருட்களை வாங்கி வருவதால் வேலையாள் பற்றாக்குறை, வண்டி வாடகை, ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, கழிவு போன்றவற்றை காரணம் காட்டுவதாகவும் கூறப்படுகின்றது.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மளிகை வியாபரிகள் மதிய நேரத்தில் தான் கொள்முதல் செய்ய மொத்த வியாபாரக் கடைகளுக்கு செல்வார்கள். அப்போது என்ன பொருட்கள் வேண்டும் என்பதை பட்டியல் போட்டு கொடுத்துவிட்டு சில்லரை வியாபாரிகள் வந்துவிடுவார்கள். மார்க்கெட்டில் இருந்து அவர்களுக்கு வாகனங்களில் பொருட்கள் அனுப்பிவைக்கப்படும். ஆனால் மதியம் 2 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி என்பதால், காவல்துறையினரின் கெடுபிடி காரணமாக பெரும்பாலான சில்லரை வியாபாரிகளால் தேவையான அளவு பொருட்களை கொள்முதல் செய்ய இயலவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கும் வகையில், கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் அதிகளவில் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதால், தேவை அதிகரித்து கடைகளில் மளிகை பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட காரணமாகி விடுகின்றது என்கின்றனர் வியாபாரிகள்.

செயற்கை விலையேற்றத்துக்கு மளிகை வியாபாரிகள் ஆயிரம் நொண்டி சாக்குகள் சொன்னாலும், அவர்கள் அங்கம் வகிக்கும் வணிகர் சங்கங்களால் அவற்றை கட்டுப்படுத்த இயலாத நிலை இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்ட வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், விலையை கூட்டி விற்கும் வியாபாரி மீது நடவடிக்கை எடுத்தால் அவர் உடனடியாக வேறு சங்கத்துக்கு போய்விடுகிறார் என்று தெரிவித்தார்.

மளிகை பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் எனில் பதுக்கல் காரர்களின் குடோன்களில் விரிவான சோதனை நடத்துவதோடு வெளி மாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments