கொரோனாவை குணப்படுத்துமா கபசுரக் குடிநீர்? போலி மருந்துகள் உஷார்.!
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க, கப சுரக்குடிநீர், ஒரு நல்ல மருந்து என வெளியான தகவலால், இதனை வாங்க, மக்கள் ஆளாய் பறக்கிறார்கள். கப சுரக்குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், ஒருபக்கம் விலை உயர்வும், மற்றொரு புறம், போலி மருந்துகள் உலா வரும் அபாயமும் எழுந்துள்ளது.
கபசுரக் குடிநீர் என்ற சித்த மருந்து, கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை குறைக்கும் திறன் கொண்டது என்று வெளியான ஒரு செய்தியை தொடர்ந்து, தமிழகமெங்கும் இதற்கான டிமான்ட், மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த மருந்து மட்டுமல்ல - வட சூர குடிநீர், Momeflw Nasal Spray ஆகியவற்றை வாங்கவும், மக்கள் தேடி அலைகிறார்கள். சென்னை- திருவான்மியூர் இம்காப்சில் கூட இம்மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், 'No Stock' என அறிவிப்பு பலகை தொங்குகிறது.
100 கிராம் கபசுரக் குடிநீர் சூரணம் அரசு சித்த மருத்துவமனையில் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட, தனியார் மருந்தகங்களோ 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கின்றனர் .
இம்மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடுகளை பயன்படுத்தி, சிலர், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
கபசுரக்குடிநீர் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என்று தமிழக பொதுசுகாதாரத் துறையும் மத்திய அரசும் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் , உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற காரணத்தினால் மக்கள் சூரணத்தை வாங்கிச் சென்று கசாயம் காய்ச்சி பருகுவதாக கூறும் சித்த மருத்துவர்கள், அரசு சித்த மருத்துவர் களை முறையாக அணுகி ஆலோசனை பெறாமல் கபசுரக் குடிநீர் குடிக்கக்கூடாது என எச்சரிக்கின்றனர்.
மேலும், இந்தச்சூழலை பயன்படுத்தி மருந்தகங்களில் போலி சூரணத்தை மக்கள் தலையில் கட்டுவதற்கும் வாய்ப்புள்ளதால் சூரணம் பேக் செய்யப்பட்டுள்ள அட்டை யில் சூரணம் தயாரிப்பதற்கான உரிமம் எண், எக்ஸ்பைரி தேதி மற்றும் மூலப்பொருட்களின் விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளதா என்பதை சோதித்து பின் வாங்கிச்சென்று பருகுவதே பாதுகாப்பானது என அறிவுறுத்துகின்றனர்.
ஓடி, ஓடி மருந்துகளை தேடுவதை விட, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள மருத்துவ வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றினாலே, கொடிய கொரோனாவின் பிடியில் இருந்து நிச்சயம் தப்ப முடியும்.
Comments