960 வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்து அமித் ஷா நடவடிக்கை
தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவுக்கு உயர்ந்துள்ளது. 1300 வெளிநாட்டவர் உள்ளிட்ட 9 ஆயிரம் பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி புறநகரான நிஜாமுதீனில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட 9 ஆயிரம் பேர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 1300 பேர் வெளிநாட்டவர்கள். இந்த ஜமாத்தில் கலந்துக் கொண்ட 15 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 532 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டதில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் ஜமாத்தில் பங்கேற்றவர்கள்.
இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நேற்று மாலை நிலவரப்படி 53 ஆக அதிகரித்துள்ளது.
தப்ளிக் மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டன.
இதன் பலனாக 9 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசா பெற்று வந்த மதரீதியான மாநாட்டில் பங்கேற்றதற்காக அவர்களை கருப்புப் பட்டியலில் வைத்து உள்துறை அமைச்சகம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
960 பேரின் விசாக்களை ரத்து செய்ய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்,
இதனிடையே காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, டெல்லி, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தப்ளிக் ஜமாத் உறுப்பினர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments