பீனிக்ஸ் மால் போனீங்களா பேனிக் ஆகவேண்டாம்..! தனியாக வீட்டிலிருங்கள்

0 7548

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள லைப் ஸ்டைல் கடையில் பணிபுரியும் 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உள்ளதால். அங்கு மார்ச் மாதம் 10 ந் தேதிக்கு பின்னர் சென்றவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி சென்னை மாநகராட்சி அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் காஸ்ட்லியான மால்களில் மிக முக்கியமானது வேளச்சேரி பீனிக்ஸ் மால்..! வாகன நிறுத்த கட்டணம் தொடங்கி பசிக்கு உண்ணும் உணவு பொருட்களின் விலை வரை இங்கு சற்று அதிகமாகவே இருக்கும்.

பெரும்பாலும் பீனிக்ஸ் மாலுக்கு ஐடி நிறுவன ஊழியர்களும் , செல்வந்தர்களும் அதிகமாக சென்றுவருவது வழக்கம், இந்த மால்களில் ஐ மாக்ஸ் மற்றும் அரண்மனை போன்ற ஆடம்பரமான ஜாஸ் சினிமாஸ் உடன் நூற்றுக்கணக்கான சர்வதேச வணிக நிறுவனங்கள் உள்ளதால் இங்கு வெளி நாட்டினரும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள்.

இங்குள்ள லைப்ஸ்டைல் கடையில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கு அரியலூரில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் போது அவரது செல்போனில் டிக்டாக் செய்து செல்போனை வாங்கி பார்த்த 3 சுகாதார பணியாளர்களும் தனிமைப்படுத்தும் நிலை ஏற்பட்டது.

மேலும் அந்த பெண்ணுடன் பணிபுரிந்த இரு இளைஞர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எங்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை சுகாதாரதுறையினர் கண்டறிந்துள்ளனர். அவர்களின் அறிவுறுத்தலின் படி சென்னை மாநகராட்சி அவசர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் கடையில் வேலைபார்த்த 3 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர்களுடன் பணிபுரிந்தவர்களை கண்டரிந்து தனிமைப்படுத்தியிருப்பதாகவும், கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை பீனிக்ஸ் மால் சென்றவர்கள் குறிப்பாக லைப்ஸ்டைல் கடைக்கு சென்று வந்தவர்களும், அனைத்து ஊழியர்களும் கவனமாக வீட்டில் தனித்து இருக்கும் படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடி மருத்துவ உதவிக்கு 044 - 25384520, மற்றும் 044 - 46122300 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவித்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட தேதிகளில் பீனிக்ஸ் மால் சென்றிருந்தால், பேனிக் ஆகாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களது வீட்டிலேயே சமூக பொறுப்பை உணர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளவும், சமூக இடைவெளியை கடைபிடித்து உங்களால் மற்றவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments