கொரோனா வைரசுக்கு எதிராக கைகொடுக்கும் டிபி தடுப்பு மருந்து?
டிபி நோயை தடுக்க குழந்தைகளுக்கு போடப்படும் BCG தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிரான மருத்துவப் போரில், புதிய திருப்பமாக அமையக் கூடும் என அமெரிக்க அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (mycobacterium tuberculosis) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் டிபி நோயை தடுக்க பிசிஜி தடுப்பூசி போடப்படுகிறது.
1948ஆம் ஆண்டு முதலே இந்த தடுப்பூசி பெருமளவில் போடப்பட்டு வருகிறது. அதேசமயம், டிபி நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததை தொடர்ந்து, அனைவருக்கும் பிசிஜி தடுப்பூசி போடும் கொள்கையை ஐரோப்பிய நாடுகள் கைவிட்டு விட்டன.
இந்நிலையில், நாடுகளின் BCG தடுப்பூசிக் கொள்கைக்கும், கொரோன வைரஸின் தாக்கம் அதிகரிப்பது அல்லது குறைவதற்கும் தொடர்பு இருப்பதாக, நியூயார்க் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் அனைவருக்கும் பிசிஜி தடுப்பூசி போடுவதை தேசிய கொள்கையாக வைத்திருக்கும் நாடுகளோடு ஒப்பிடும்போது, இத்தாலி, நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா மிகக் கடுமையாகப் பாதித்திருப்பதாக அந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நோய் தாக்கம் மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது, ஆகிய 2 காரணிகளின் அடிப்படையில் பிசிஜி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரான போரில் புதிய திருப்பமாக அமையலாம் என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது, ஊக்கமளிப்பதாக இருந்தாலும், அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க முடியாது என இந்தியாவில் உள்ள வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
பிசிஜி தடுப்பு மருந்து, சார்ஸ் தொற்றுக்கு எதிராக பயனுள்ளதாக இருந்தது என்றும், நோயில் இருந்து குணம் அளிக்கக் கூடியது அல்ல என்றாலும் அதன் தீவிரத்தையும் தாக்கத்தையும் குறைக்கக் கூடியதாக இருந்தது என பஞ்சாப் எல்பியூ (LPU) பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிஞர் மோனிகா குலாட்டி தெரிவித்துள்ளார்.
அதேசமயம், கொரோனா வைரசுக்கு எதிராக டிபி தடுப்பு மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதை சோதனை செய்து உறுதிப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை எனவும் இந்திய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments