இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தாராவியில் உள்ள சியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம், அம்பாலாவில் 67 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். குஜராத் மாநிலம், வதோதராவில் 52 வயது நபர் ஒருவரும், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்திலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 49 வயது நபரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து, நாடு முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர்த்து நாட்டின் பல இடங்களில் கடந்த 12 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா நோயால் பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 965ஆக (1,965) அதிகரித்துள்ளது.
இதுதவிர்த்து, மருத்துவமனைகளில் ஆயிரத்து 764 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 151 பேர் சிகிச்சைக்கு பிறகு, கொரோனாவில் இருந்து குணமடைந்து இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, கர்நாடகா திரும்பிய 391 பேரை அந்த மாநில அரசு அடையாளம் கண்டுபிடித்துள்ளது. அவர்கள் 391 பேரும் தனிமைபடுத்தி கண்காணிக்கப்படுவதாக கூறியுள்ள முதலமைச்சர் எடியூரப்பா, பிடாரில் பரிசோதிக்கப்பட்ட 91 பேரில் 11 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் அந்த வகுப்புகளில் படித்த மாணவ மாணவியர் அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி அடைய வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஆயிரத்துக்கு 400 பேர் திரும்பியிருந்தனர். அவர்களில் ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா உள்ளதா என்று கண்டுபிடிக்க பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அறிய : https://www.mohfw.gov.in/
Comments