தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ள பகுதியாக அறிவிப்பு

0 6579

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதாக தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1939ம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் 62ஆவது பிரிவின்கீழ் பொது சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக கொரோனா அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், 76ஆவது பிரிவின்கீழ் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

1897ம் ஆண்டு கொள்ளை நோய் சட்டத்தின்படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளதாகவும், அதன்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தேவையான எண்ணிக்கையில் தண்ணீர் குழாய்கள், வாஷ் பேசின்கள், திரவ சோப் கரைசல் அல்லது கை கழுவும் சோப் வைக்க வேண்டும் எனவும், கட்டிடத்துக்குள் நுழையும் முன்பும், வெளியேறும்போதும் கைகளை கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா குறித்த தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்துக்குள் பொது சுகாதார துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும், அவ்வாறு தெரிவிக்க தவறினால், அங்கீகாரமும், அனுமதியும் ரத்து செய்யப்படுவதுடன் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து, தொற்று நோய் ஏற்படாது பராமரிக்கப்பட வேண்டும், அதுபோல நோய் தொற்று நடவடிக்கைகள் எடுக்க தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவுரைகளை கடைபிடிக்க தவறுவோர் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், கொள்ளை நோய் சட்டம் ஆகியவற்றின்கீழ் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதேபோல இந்திய தண்டனையியல் சட்டத்தின் 188ஆவது பிரிவின்கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments