டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்களை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

0 2104

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்று திரும்பிய பலர் கண்டறியப்பட்டு, மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளைச் சேர்ந்த 14 பேர் கண்டறியப்பட்டு 13 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும் ஒருவர் நாகை மருத்துவமனையிலும் உள்ள கோரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கேரளாவில் இருந்து சொந்த ஊரான பெருஞ்சேரிக்கு வந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேர் கண்டறியப்பட்டு 36 பேர் திருவள்ளூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் , மீதமுள்ள 6 பேர் பூவிருந்தவல்லியிலும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த அய்யனார் ஊற்று பகுதியைச் சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததாக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தனிமை வார்டில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவக் குழு ஒன்று அந்தப் பகுதியில் முகாமிட்டு, அங்குள்ள மக்களை பரிசோதித்து வருகிறது.

தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படும் 34 பேர் தருமபுரி அரசு மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் அண்மையில் மகாராஷ்டிரா சென்று திரும்பியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய சென்னை திருவொற்றியூர், எண்ணூர், தண்டையார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்களை, அங்குள்ள சமுதாய நலக் கூடத்தில் தங்கவைத்து பரிசோதானை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள் என்று கூறப்படும் 28 பேர் உட்பட 69 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 20 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments