அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

0 4319

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்கும் நடவடிக்கைளை தீவிரப்படுத்தவது பற்றி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 457 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,834 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில், வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், டெல்லியில் நடந்த மதம் சார்ந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை கண்டறியும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு மாநில அரசுகளிடமும் இருப்பில் உள்ள அத்தியாவசிய மருந்து பொருட்கள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் போலீஸ் டிஜிபிக்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

அப்போது, தப்லிக் ஜமாத் மத நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் போர்கால அடிப்படையில் விரைந்து கண்டுபிடிக்கவும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை மாநில அரசுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். அதோடு, சுற்றுலா விசாவில் வந்து விதிமுறை மீறி மத நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை முழு வீச்சில் அமல்படுத்த வேண்டுமெனவும், மாநிலங்களுக்கு இடையேயான அத்தியாவசிய பொருட்கள் தடை இன்றி செல்வதையும், அவற்றின் உற்பத்தி தொய்வில்லாமல் இருப்பதையும், சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதையும் மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் ராஜிவ் கவுபா கேட்டுக் கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments